
தெலுங்கானாவில் ஆளுங்கட்சியின் பெயர் மாற்றத்துக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
தெலுங்கானாவை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி முதலமைச்சர் சந்திரசேகர் ராவை தலைவராக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியை கடந்த அக்டோபர் மாதம் தேசிய கட்சியாக மாற்றி, பாரதிய ராஷ்டிர சமிதி என பெயர் மாற்றி சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.

இதற்கு அங்கீகாரம் கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.எஸ். கட்சி கடிதம் அனுப்பியது. கட்சியின் பொதுச்செயலாளர் சந்தோஷ் குமார் இந்த கடிதத்தை எழுதியிருந்தார். இந்த பெயர் மாற்றத்துக்கு தற்போது தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்து இருக்கிறது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையச் செயலாளர் கே.என்.பார், சந்திரசேகர் ராவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், ‘தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற உங்கள் கட்சியின் பெயரை பாரதிய ராஷ்டிர சமிதி என மாற்றம் செய்வதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு உள்ளது’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அளவிலான அரசியலின் முன்னெடுப்பிற்கு பெயர் மாற்றம் ஒப்புதல் அக்கட்சியினருக்கு மிக பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.
newstm.in