வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலின் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள் உடனடியாக கரைத்திரும்புமாறு நேற்று தமிழக கடலோர காவல்துறை மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வங்க கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கரை திரும்பினார்.
இந்த நிலையில் கடலூரில் இருந்து 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் மாண்டஸ் புயலின் பாதையில் உள்ள கச்சா எண்ணெய் எடுக்கும் கிணற்றில் கடலில் சிக்கித் தவித்த 3 நபர்களை கடலோர காவல்படை மீட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருந்தபோதிலும் கடலோர காவல்படையின் இலகுரக ஹெலிகாப்டர் நிலைமையை சமாளித்தது 3 நபர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மேலும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடுமாறு அனைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களுக்கும் கடலோர காவல் படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.