புதுடெல்லி: ‘எம்.பி.க்கள் சிலர் எனக்கு எதிராக ட்விட்டரில் எழுதுகின்றனர். அவ்வாறு எழுதக் கூடாது’ என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்தார்.
மக்களவையில் நேற்று திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் மகுவா மொய்த்ரா, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தொடர்பான ஒரு பிரச்சினையை எழுப்பிய உடன், சபாநாயகர் ஓம் பிர்லா இதனை கூறினார். எந்த எம்.பி.யின் பெயரையும் குறிப்பிடாமல் அவர் இதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் நேற்று கேள்வி நேரத்தில் கூறும்போது, “மக்களவையில் உறுப்பினர்கள் பேசுவதற்கு சபாநாயகர் வாய்ப்பளிக்கவில்லை என்று சில உறுப்பினர்கள் சில சமயங்களில் ட்விட்டரில் எழுதுகின்றனர். சபாநாயகரைப் பற்றி உறுப்பினர்கள் ட்விட்டரில் எழுதக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்” என்று குறிப்பிட்டார்.