ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், அன்னவரம் பகுதியை சேர்ந்தவர் சசிகலா (20). இவர் விசாகப்பட்டினம் அருகே உள்ள துவ்வாடா பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் தனது ஊரில் இருந்து ரயில் மூலமாக கல்லூரிக்கு சென்று வருகிறார்.
இந்த நிலையில், நேற்றும் இவர் வழக்கம்போல் குண்டூர்-ராயகடா எக்ஸ்பிரஸ் ரயிலில் கல்லூரிக்கு பயணம் செய்தார். அப்போது துவ்வாடா ரயில் நிலையம் வந்தபோது, ரயில் நிற்பதற்குள் சசிகலா ரயிலில் இருந்து இறங்கினார்.
அப்போது அவர் கால் தவறி, ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் விழுந்து விட்டார். இவரது இடுப்புப் பகுதி பிளாட்பாரத்துக்கும், ரயிலுக்கும் மத்தியில் சிக்கியது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர், பிளாட்பாரம் இடிக்கப்பட்டு சசிகலா பத்திரமாக மீட்கப்பட்டார்.அதன் பின்னர், அவர் விசாகப்பட்டினம் கிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மாணவி உயிரிழந்தார்.
மாணவியின் மரணம் குறித்து மருத்துவர்கள் தரப்பில், “மாணவியின் சிறுநீரகப் பைகள் கடுமையாக சேதமடைந்து ரத்தம் கசிந்தது. இதனால உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு அவர் மரணம் அடைந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.