பால் முகவர்கள் சங்கம் பரபரப்பு அறிக்கை..!

கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே, தினசரி 43, 42லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஊடகங்கள் முன் கதையளந்து கொண்டிருக்கிறார் என்று, தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கூறியுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சிக்கு வரும் முன்பு ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் கொள்முதல் சுமார் 38.26லட்சம் லிட்டராக இருந்தது.

தற்போது அது 30.50 லட்சம் லிட்டராக குறைந்து போனாலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே முழு பூசணிக்காயை ஒரு தட்டு சோற்றில் மறைத்தது போல, தினசரி 43, 42லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஊடகங்கள் முன் கதையளந்து கொண்டிருக்கிறார்.

கடந்த நவம்பர் மாதம் ஆவின் நிறைகொழுப்பு பாலான ஆரஞ்சு நிற பிரிமியம் பாலுக்கான விற்பனை விலையை தமிழக அரசு லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தியது. அப்போது, ‘வணிகரீதியான பாலுக்கு தான் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது; ஏழை, எளிய மக்கள் மாதாந்திர அட்டை மூலம் வாங்கும் பாலுக்கு விலை உயர்த்தப்படாததால் பொதுமக்கள் எவரும் பாதிக்கப்பட மாட்டார்கள்’ என்று அமைச்சர் நாசர் கூறினார்.

ஆனால், சென்னையில் மட்டுமே ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டிற்கான மாதாந்திர அட்டை புழக்கத்தில் இருக்கும் சூழலில், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் அனைத்திலும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளுக்கு மாதாந்திர அட்டை கிடையாது என்பதும், சென்னை மக்கள் ஒரு லிட்டர் பால் 46 ரூபாய்க்கு வாங்க, சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் லிட்டருக்கு 14 ரூபாய் அதிக விலை கொடுத்து ஒரு லிட்டர் பாலை 60 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதிலும், ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் வேண்டாம் என்றால், அதைத் தான் வாங்கியாக வேண்டும் என ஆவின் நிர்வாகம் பால் முகவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அப்படியானால், இந்த இரட்டை நிலை யாரை ஏமாற்றுவதற்கு என்று தெரியவில்லை.

தமிழக பால்வளத்துறை அமைச்சராக நாசர் பொறுப்பேற்ற 18 மாதங்களில் ஆவினின் பால் கொள்முதல் மற்றும் அதன் விற்பனை அளவு, ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சி, பால் விற்பனை விலை உயர்வுக்கான காரணம் என தொடர்ந்து அண்டப்புளுகு, ஆகாசப்புளுகுகளை அள்ளி விட்டது தான் அவர் செய்த அளப்பரிய சாதனையாக இருக்கிறது. இந்த சாதனை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா..?, அல்லது மறைக்கப்படுகிறதா, அல்லது தெரிந்தும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறாரா..? எனத் தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.