சொந்த மாநிலம் என்பதால், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் அளித்தார். பஞ்சாபில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி, குஜராத் தேர்தலிலும் பாஜகவுக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும் என திட்டமிட்டது. ஆம் ஆத்மி நிறுவனரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் குஜராத்தில் தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கினார்.
இதை கவுரவ பிரச்சினையாக கருதிய பிரதமர் மோடியும், குஜராத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடி குஜராத்துக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்து, பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
காந்திநகரில் இருந்து மும்பைக்கு வந்தே பாரத் ரயில் சேவை திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
சூரத், அகமதாபாத் உட்பட குஜராத்தின் பல நகரங்களில் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தப்பட்டது. இதன்மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்களை பிரதமர் மோடி சந்தித்தார். குஜராத்தில் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 141 பேர் உயிரிழந்த சம்பவம் தேர்தல் நேரத்தில் மாநில அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது. அதையும் சமாளித்து பிரதமர் மோடி குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வெற்றிகண்டுள்ளார்.
பிரதமரின் வீட்டு வசதி திட்டம், ஜல் சக்தி அமைச்சகத்தின் வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் திட்டம் போன்றவை எல்லாம் குஜராத் மாநிலத்தில் சிறப்பாக அமல்படுத்தப்பட்டன. குஜராத்தில் மொதேரா கிராமத்தை நாட்டின் முதல் சூரிய மின்சக்தி கிராமமாக பிரதமர் மோடி மாற்றி காட்டினார்.
இவைகளும் பாஜகவின் வெற்றிக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.