சேலம் இரும்பாலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவர் தனது குடும்பத்தோடு இரும்பாலையில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரும்பாலை முதல் கேட்டில் சக்திவேல் பாதுகாப்பு பணியில் இருந்தார். மதியம் 2 மணியிலிருந்து இரவு 9 மணி வரை அவருக்கு பணி நேரமாகும். இந்நிலையில் மாலை 3 மணியளவில் சக்திவேலிடம் இருந்த இன்சாஸ் ரக துப்பாக்கியால் தன்னைத்தானே திடீரென சுட்டுக்கொண்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, சக்திவேல் ரத்தவெள்ளத்தில் விழுந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு இரும்பாலையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். ஆனால் சக்திவேலினை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உதவி கமிஷ்னர் அசோகன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், முதற்கட்டமாக சக்திவேல் குடும்ப பிரச்னைக் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது வேலை செய்யும் இடத்தில் ஏதும் பிரச்னையா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.