மாண்டஸ் தீவிர புயல்: என்னென்ன மாற்றங்கள்? என்னென்ன எச்சரிக்கைகள்?

தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது மாண்டஸ். இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முதல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையிலிருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள தீவிர புயல் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இந்த தீவிர புயல், புயலாக வலுவிழந்து மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிர புயல், கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நிகழ்ச்சிகள், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எனென்ன மாற்றங்கள்?

* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், தருமபுரி, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 24 மாவட்டங்களில் இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

* புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

*திமுக அரசை எதிர்த்து அதிமுக பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள், ஊராட்சிகள் அளவில் வெவ்வேறு நாள்களில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. அந்த வகையில் இன்று டிசம்பர் 9ஆம் தேதி பேரூராட்சிகள் அளவில் போராட்டம் நடத்தப்பட இருந்தது. கனமழை, புயல் காரணமாக இன்று நடைபெற இருந்த போராட்டம் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*அண்ணா பல்கலைக்கழகம் இன்று நடத்த இருந்த பருவத் தேர்வுகளை ஒத்திவைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

*திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் இன்றும் நாளையும் (டிசம்பர் 9, 10)நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

* சென்னைப் பல்கலைக் கழகத்தில் இன்று (டிசம்பர் 9) நடைபெற இருந்த தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

*இன்று நடைபெற இருண்ட பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

*பொதுமக்கள் மெரினா, பெசன்ட்நகர் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

*மரங்களின் அருகில் நிற்பதையோ, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களின் கீழ் நிற்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

*புயல் மற்றும் மழையின்போது பொதுமக்கள் தங்களின் அவசரத் தேவைக்காக அல்லது புகார்களை தெரிவிக்க மாநகராட்சியின் 1913 உதவி எண்ணிலும், 044-2561 9206. 044-2561 9207 மற்றும் 044-2561 9208 ஆகிய தொலைபேசி எண்களிலும், 94454 77205 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

*புகார்களை விரைந்து பெறவும், அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் ஏதுவாக, 10 இணைப்புகளுடன் செயல்பட்டுவந்த 1913 உதவி எண், 50 இணைப்புகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.