மாண்டஸ் புயல் எதிரொலி: கோயம்பேடு மார்க்கெட்டில் தேக்கமடைந்த காய்கறிகள்

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்ததால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வரும் வியாபாரிகள் வருவது சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 2000 டன் காய்கறிகள் தேக்கமடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் எதிரொலியாக சென்னை உட்பட வட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்தமழை பெய்துவருகிறது. நேற்று நள்ளிரவு முதல் சென்னை மாநகரில் விடிய விடிய மழை கொட்டிதீர்த்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்றுடன் மழைபெய்ததால் வாகனங்களை இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில் வியாபாரிகள் காய்கறி வாங்க வர முடியாததால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 2000 டன் அளவிலான காய்கறிகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு இந்த கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சுமார் 5,000 டன் அளவிலான காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். மழை தொடர்ந்து பெய்ததால் அதிகாலையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. காய்கறி வாங்கவரும் வியாபாரிகளால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் இன்று காய்கறிகள் விற்பனை குறைந்த அளவே நடைபெற்றுள்ளது.
image
பல ஆயிரம் கிலோ காய்கறிகள் தேக்கமடைந்துள்ளதால் காய்கறி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். காய்கறிகள் தேக்கமடைந்துள்ளதால் காய்கறி விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் 20 ரூபாய் விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது 12 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் 22 ரூபாய் வரை விற்கப்பட்ட வெங்காயம் தற்போது 14 ரூபாய்க்கு குறைந்துள்ளது. முட்டைகோஸ் 6 ரூபாய்க்கும், பீன்ஸ் 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கெனவே ரூ.20 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த பீன்ஸ் தற்போது 5 ரூபாய் வரை குறைந்து ரூ.15 க்கு குறைந்துள்ளது விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.