மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை கடல் சீற்றத்தால் சேதம் – மாநகராட்சி அறிக்கை

சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் எதிரே மாற்றுத்திறனாளிகளுக்காக 1.14 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மரப்பாதை மாண்டஸ் புயலால் சேதமடைந்துள்ளது.
380 மீட்டர் நீளத்தில் 3 மீட்டர் அகலத்தில் பிரேசில் தேக்கு, வேல மரம் ஆகியவற்றால் அமைக்கப்பட்ட இந்த மரப்பாதை கடந்த நவம்பர் 27 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என். நேரு, மா.சுப்ரமணியன், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்ட இப்பாலத்தை நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கடந்த 13 நாட்களில் பயன்படுத்தி உள்ளம் மகிழ்ந்தனர். சமூக வலைதளம் முழுக்க நெகிழ்ச்சியை பரப்பி வந்த இந்த மரப்பாதை கடந்த 2 நாட்களில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
image
அலை மோதும் கடைசி பாலப்பகுதிகள் சேதமடைந்திருப்பினும் பாலத்தின் மற்ற பகுதிகளில் எவ்வித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பாதையை பார்வையிட்டு ஆய்வு செய்து, சேதம் குறித்து மண்டல மாநகராட்சி அதிகாரிகள் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். எனவே, மழை நின்ற ஓரிரு நாட்களுக்குள் இப்பாலம் உடனடியாக சீரமைத்து பழைய நிலைக்கு கொண்டு வரப்படும் என மாநகராட்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.