Cyclone Mandous Live: “சென்னையிலிருந்து 320 கி.மீ தொலைவில் மாண்டஸ்… காற்றின் வேகம் அதிகரிக்கும்’ – வானிலை ஆய்வு மையம்

`85 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும்’

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல், காரணமாக புதுச்சேரி, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் படிப்படியாக காற்றின் வேகமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாண்டஸ் புயலானது இன்று காலை நிலவரப்படி, சென்னையில் இருந்து 320 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 240 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலலையில், கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தலைமைச் செயலாளர் உத்தரவு..!

இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில், “நேற்று (07.12.2022) தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது “மாண்டஸ்” புயலாக வலுவடைந்து தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது என்றும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டவிற்கு இடையே 09.12.2022 அன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்றும்” தெரிவித்திருந்தது. 

இதன் காரணமாக 08-12-2022 முதல் 11-12-2022 முடிய 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் எனறும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், புயல் மற்றும் கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து துறை உயர் அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டு சில உத்தரவுகளை வழங்கினார்.

அதன்படி,

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 396 வீரர்கள் அடங்கிய 12 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.

கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு தொடர்ந்து புயல் குறித்த அறிவிப்புகளை வழங்க வேண்டும்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை (Common Alert Protocol) மூலம் குறுஞ்செய்திகள் வாயிலாக எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ள நிலையில் இதனை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

முன்னெச்சரிக்கை செய்திகள் TNSMART செயலி மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

பேரிடரின் போது காவல்துறை மூலமாக போக்குவரத்தை சீரமைக்க போதுமான காவலர்களை ஈடுபடுத்த வேண்டும்.

பாதிப்பிற்குள்ளாகக்கூடிய இடங்களில் முன்கூட்டியே தேவையான படகுகள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும்.

மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்கள் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைப்பதோடு, போதுமான அளவு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.

பாதிப்பிற்குள்ளாகும் / தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

 பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பலத்த காற்று வீசும் போது மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நீர் நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் தன்படம் எடுப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாண்டஸ் புயல் அப்டேட்!

நெருங்கும் புயல் சீற்றத்துடன் காணப்பட்ட புதுச்சேரி கடல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு சமயத்தில் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று இரவு 11:30 மணியளவில் ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இன்று (08.12.2022) காலை 8.30 மணி நிலவரப்படி, காரைக்காலுக்குக் கிழக்கு-தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 550 கி.மீ. தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது.

மாண்டஸ் புயல்

இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம்-புதுவை-தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 9-ம் தேதி நள்ளிரவில் கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மாண்டஸ் புயல்

நாளை (09.12.2022), தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மாண்டஸ் புயல்

தற்போதைய நிலவரப்படி மாண்டஸ் புயலின் வேகம் மணிக்கு 6 கி.மீ வேகத்திலிருந்து 12 கி.மீ ஆக அதிகரித்துள்ளது. புயலின் காரணமாகக் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கக் கூடும். மேலும், வட தமிழக கடற்கரை பகுதிகளில் 75 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது. நாளை நள்ளிரவு வாக்கில், புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை காலை வரை தீவிர புயலாக நகரும் மாண்டஸ் புயல், பின் சற்று வலுக்குறைந்து கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.