சென்னை: அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் தாக்குதலில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தது குறித்து வழக்கறிஞர் பாலு தலைமையில் உண்மை அறியும் குழு அமைத்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து இன்று அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையில் காவல்துறையினர் வீடு புகுந்து நடத்திய தாக்குதலில் காயமடைந்த அப்பாவி விவசாயி செம்புலிங்கம் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டார். அதன்பின் 13 நாட்களாக பல மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்றும் பயனின்றி நேற்று காலை திருச்சி தனியார் மருத்துவமனையில் காலமானார்.
காவல் துறையினர் தாக்கியதால் வயிற்றில் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டதால்தான் அவர் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். செம்புலிங்கத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், செம்புலிங்கத்தை வீடு புகுந்து தாக்கிய காவலர்கள் 8 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். ஆனால், காவல் துறை எந்த விசாரணையும் நடத்தவில்லை; யாரும் கைது செய்யப்படவில்லை.
மாறாக, இந்த விவகாரத்தை திசை திருப்பும் வகையில் கோட்டாட்சியர் விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது. கோட்டாட்சியர் விசாரணை என்பதே தவறு செய்த காவலர்களை காப்பாற்றுவதற்கான ஏற்பாடு ஆகும். அது மட்டுமின்றி, ”செம்புலிங்கம் கைது செய்யப்படவோ, காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்படவோ இல்லை; அதனால் அவரது மரணம் குறித்து காவல்துறை மீது அவதூறு பரப்பும் வகையில் தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று செம்புலிங்கம் மரணத்திற்கு நீதி கேட்டு போராடுவோரை காவல்துறை அச்சுறுத்தியுள்ளது.
செம்புலிங்கம் கைது செய்யபடவோ, காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்படவோ இல்லை தான். ஆனால், அவரது வீட்டிற்குள் 8 காவலர்கள் புகுந்து கொடூரமாக தாக்கியுள்ளனனர்; ஊர்மக்கள் திரண்டு வந்த பின்னர் தான் காவல்துறையினர் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றனர்; இதற்கு சாட்சிகள் உள்ளனர். அவ்வாறு இருக்கும் போது காவல்துறையினர் வழக்கை திசை திருப்பும் செயலில் ஈடுபடக்கூடாது.
செம்புலிங்கம் மரணம் குறித்த விவகாரத்தில் நடந்த உண்மைகளை ஆவணப்படுத்தி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தலைமையில் உண்மை கண்டறியும் குழுவை அனுப்ப பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. இந்தக் குழுவில் சட்டமன்ற உறுப்பினர் சி.சிவக்குமார், உழவர் பேரியக்கத்தின் தலைவர் கோ.ஆலயமணி, ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலின், செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் ந.வினோபா பூபதி ஆகியோரும் இடம்பெறுவர்.
இக்குழுவினர் கள ஆய்வு நடத்திய பின்னர் கிடைக்கும் ஆதாரங்களின்படி காவல் துறை தலைமை இயக்குநர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து செம்புலிங்கம் மரணத்திற்கு நீதி கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்”என்று பாமக தெரிவித்துள்ளது.