வங்க தேசத்திற்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், இஷான் கிஷன் ஆகியோர் இறங்கினர். தவான் 8 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அடுத்ததாக விராட் கோலியுடன் இணைந்த இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
விராட் கோலியும், இஷான் கிஷனும் பந்துகளை பறக்க விட்டனர். 131 பந்துகளை எதிர்கொண்ட இஷான் கிஷன், 24 பவுண்டரி மற்றும் 10 சிக்சர்களுடன் 210 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
அதே போல் தன் பங்கிற்கு விராட் கோலி சதம் விளாசினார். கோலி 91 பந்துகளில் 113 ரன்கள் அடித்தார். இதனையடுத்து அதிகம் சதம் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
வாஷிங்டன் சுந்தர் 37 ரன் எடுத்தார். அக்சர் படேல் 20 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 409 ரன்களை குவித்தது.
410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 29 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஷகிப் அல் ஹசன் 43 ரன்னில் வெளியேறினார். யாசிர் அலி 25 ரன்னும், மகமதுல்லா 20 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், வங்காளதேச அணி 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. தொடரை ஏற்கனவே வங்கதேசம் வென்றிருந்தாலும், இந்த போட்டியில் இந்தியா பல உலக சாதனைகளை படைத்துள்ளது.
400க்கும் அதிகமாக மீண்டும் ரன் அடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இஷான் கிஷன் தனது முதல் சதத்தை, இரட்டை சதத்துடன தொடங்கியுள்ளார். குறைந்த பந்துகளில் அவர் சதம் அடித்துள்ளார். விராட் கோலி 72 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இப்படி பல சாதனைகளை இந்தியா புரிந்துள்ளது.
newstm.in