காசி – தமிழகம் இடையே 'காசி தமிழ்ச் சங்கமம் எக்ஸ்பிரஸ்' புதிய ரயில் அறிமுகம்

வாரணாசி: காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் காசி மற்றும் தமிழகம் இடையே ‘காசி தமிழ்ச் சங்கமம் எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். காசி தமிழ்ச் சங்கமம் பயணத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த குழுவினருக்கு அவர் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற 8வது தமிழகப் பிரதிநிதிகள் குழுவினருடன் அவர் கலந்துரையாடினார். அப்போது இந்தப் பயணத்தின்போது தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை அந்தக் குழுவினர் அமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். அத்துடன் அவர்களுக்கு கிடைத்த உபசரிப்புக் குறித்தும் அவர்கள் விளக்கி நன்றி தெரிவித்தனர்.

அப்போது, இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக (ஐஆர்சிடிசி) குழுவினரின் முயற்சிகளை அமைச்சர் பாராட்டினார். இதுபோன்ற மக்களிடையேயான பரிமாற்ற நிகழ்ச்சிகள் நமது மரபுகள், அறிவு மற்றும் கலாச்சாரத்தில் பிணைப்பை ஏற்படுத்தி நெருக்கத்தை அதிகரிக்கும் என்று அவர் கூறினார். அதே நேரத்தில் பாரம்பரியத்தைப் பற்றிய புரிதலை உருவாக்கி, இந்த இரு பகுதி மக்களிடையே உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே ‘காசி தமிழ்ச் சங்கமம் எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

தொடர்ந்து வாரணாசி சந்திப்பு ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டும் மறுசீரமைப்புத் திட்டப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். வருங்காலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பைத் திட்டமிடுமாறு அவர் அறிவுறுத்தினார்.

வாரணாசி ரயில் நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர், “இந்த ரயில் நிலையத்தை விமான நிலைய முனையமாக மாற்றும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையமாக இது மறுசீரமைக்கப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தை உலகிலேயே சிறந்த ரயில் நிலையங்களில் ஒன்றாக மாற்றும் வகையில் சுமார் 7000 கோடி ரூபாய் செலவிடப்படும்.

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை அடுத்த 50 ஆண்டுகளைக் கணக்கில் கொண்டு முன்கூட்டியே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. வாரணாசி நகரப் பகுதியில் உள்ள ரயில் நிலையங்களுக்கு பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதை எளிதாக்கும் வகையில், இப்பகுதியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படும். பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்கும் வகையில் தூங்கும் வசதியுடன் கூடிய (ஸ்லீப்பர்) வந்தே பாரத் ரயில் தயாரிப்பு விரைவில் தொடங்கப்படும்” என்று கூறினார்.

நாட்டின் 75-வது ஆண்டு விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக கல்வி அமைச்சகத்தால் ஒரு மாத கால நிகழ்ச்சியான காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காசியில் நடைபெறும் இந்தத் விழாவைக் காண பல்வேறு தரப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர். ரயில்வே அமைச்சகமும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகமும் (ஐஆர்சிடிசி) நிகழ்ச்சிக்கு வருவோரை காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு விருந்தோம்பல் பணிகளை சிறப்பாகச் செய்து வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.