கோலி- கிஷன் அதிரடி: இந்தியாவுக்கு 3வது அதிக பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை

டாக்கா,

இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 பந்தில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங் ஆடி வேகமாக ஸ்கோர் செய்து நல்ல தொடக்கத்தை இந்திய அணிக்கு அமைத்து கொடுத்தார்.

3ம் வரிசையில் இறங்கிய கோலி, இஷான் கிஷனுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். இஷான் கிஷன் சதத்திற்கு பின்னர் காட்டடி அடித்து சிக்ஸர் மழை பொழிந்தார் . அதனால் இந்திய அணியின் ஸ்கோர் அதிவேகமாக உயர்ந்துவருகிறது. தொடர்ந்து அதிரடியை தொடர்ந்த இஷான் கிஷான்126 பந்துகளில் இரட்டைசதமடித்து அசத்தினார்.

இந்திய அணியில் ஒருநாள் போட்டியில் சச்சின் , சேவாக் ,ரோகித் சர்மாவுக்கு பிறகு இரட்டைசதமடித்து இஷான் கிஷான் சாதனை படைத்துள்ளார்.தொடர்ந்து ஆடிய அவர் 24 பவுண்டரி , 10 சிக்ஸர்களுடன்131 பந்துகளில் 210 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் நிலைத்து ஆடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய அவர் 91 பந்துகளில் 113 ரன்களுக்கு வெளியேறினார்.

இஷான் கிஷான், விராட் கோலி இனைந்து ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக மூன்றாவது அதிக பார்ட்னர்ஷிப்பை பதிவு செய்துள்ளனர். இருவரும் இரண்டாம் விக்கெட்டுக்கு 290 ரன்கள் திரட்டினர். இஷான் கிஷான் மற்றும் விராட் கோலி இடையேயான பார்ட்னர்ஷிப் இந்தியாவுக்கான மூன்றாவது அதிகபட்சம் மற்றும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக ஏழாவது அதிகபட்சமாகும்.

1999 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 331 ரன்களை குவித்த இந்திய ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் இந்தியாவுக்கான மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை படைத்தனர்.

முன்னாள் இந்திய கேப்டன்களான சவுரவ் கங்குலி மற்றும் டிராவிட் ஆகியோர் 318 ரன்களை எடுத்தனர். இது இந்தியாவின் இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும்.

மேற்கிந்தியத் தீவு வீரர்களான கிறிஸ் கெய்ல் மற்றும் மார்லன் சாமுவேல்ஸ் ஆகியோர் 2015 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக 372 ரன்கள் சேர்த்ததே ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் என்ற சாதனையாக உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.