தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை வார சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளான சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் காய்கறி,பழங்கள், மீன்,மசாலா சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக சாத்தான்குளம் சந்தைக்கு அதிக அளவில் வந்திருந்தனர்.
அப்பொழுது ஜெர்மனி நாட்டிலுள்ள கொலோன் நகரத்தைச் சேர்ந்த ஜுர்கன்,பிரான்சி தம்பதியினரும் சாத்தான்குளம் வாரச்சந்தைக்கு வந்திருந்தனர். இந்தியாவுக்கு தரைவழியாக சுற்றுலா வந்த அவர்கள், பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு சாத்தான்குளம் வாரச்சந்தைக்கும் விசிட் அடித்தனர். அப்போது, சந்தை முழுவதையும் சுற்றிப் பார்த்த அவர்கள், பலாப்பழம்,கேரட், வாழைக்காய் சிப்ஸ் போன்றவற்றை மகிழ்ச்சியுடன் வாங்கினர்.
தாங்கள் ஜெர்மனியில் இருந்து தரைவழியாக இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்ததாக தெரிவித்த அவர்கள், சாத்தான்குளம் சந்தைக்குப்பிறகு ராமேஸ்வரம் செல்ல இருப்பதாக தெரிவித்தனர். ஜெர்மனியில் இருந்து தங்கள் வாகனத்தை இருவரும் மாற்றி மாற்றி ஓட்டிவந்ததாகவும் தெரிவித்தனர். அவர்களது வாகனத்தில் ஒரு சிறிய குடும்பத்திற்கு தேவையான அத்தனை வசதிகளும் இருந்தன.