திருமணத்துக்கு முந்தைய நாள்; 150 அடி உயர பாறையிலிருந்து செல்ஃபி… கல்குவாரி குட்டையில் விழுந்த ஜோடி

கேரள மாநிலம், கொல்லம் பரவூரைச் சேர்ந்தவர் வினு கிருஷ்ணன்(25). துபாயில் வேலை செய்து வருகிறார். அவருக்கும் கொல்லம் பாரிப்பள்ளியைச் சேர்ந்த சாந்த்ரா எஸ்.குமார்(19) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அதோடு நேற்று திருமணம் நடக்கவிருந்தது. அதற்காக துபாயில் இருந்து ஒரு வாரம் முன்பு வினு கிருஷ்ணன் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் வினு கிருஷ்ணனும், சாந்த்ராவும் சேர்ந்து ஆயிரவில்லி என்ற கோயிலுக்குச் சென்றிருக்கின்றனர். பின்னர் அருகில் உள்ள 150 அடி உயர பாட்டுப்புறம் பாறை மீது ஏறியிருக்கின்றனர். இந்த பாறையின் உச்சியில் நின்று சடயமங்கலம் பகுதியில் பாறை மீது அமைக்கப்பட்டிருக்கும் பெரிய ஜடாயு சிற்பம் மற்றும் பல இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். அந்த பாறை மீது நின்று வினு கிருஷ்ணனும், சாந்த்ராவும் செல்ஃபி எடுத்திருக்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி சாந்த்ரா கீழே உள்ள கல்குவாரி குட்டையில் விழுந்திருக்கிறார். அவரை காப்பாற்றுவதற்காக வினு கிருஷ்ணனும் 150 அடி உயரத்தில் இருந்து கல்குவாரி குட்டையில் குதித்திருக்கிறார்.

கக்குவாரி குட்டையில்.மீட்கப்பட்ட ஜோடி

பின்னர் சாந்த்ராவின் ஆடையை பிடித்து இழுத்து அருகில் உள்ள பாறையில் அமர வைத்திருக்கிறார். சாந்த்ராவின் காலில் காயம் ஏற்பட்டதால் சத்தமாக அலறியிருக்கிறார். சத்தம் கேட்டு அப்பகுதியினர் அங்கு சென்று மீட்புபணியில் ஈடுபட்டதுடன் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் கயிறு மற்றும் மிதவை மூலம் இருவரையும் மீட்டனர்.

அவர்கள் இருவரும் பாரிப்பள்ளி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சாந்த்ரா-வின் காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும், வினுவுக்கு பெரிய அளவில் காயம் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் இருவரும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.

திருமணம்

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், “ஆயிரவில்லி கோயிலுக்கு வருபவர்கள் காட்டுப்புறம் பாறையின் மீது ஏறி சடையமங்கலம் ஜடாயு பாறை உள்ளிட்டவைகளை ரசிப்பது வழக்கம். முன்பு முழு பாறையாக இருந்த நிலையில் பாதியை உடைத்து குளமாக மாற்றி விட்டனர். அந்த குளம் சுமார் 50 அடி ஆழம் இருக்கும். இருவரும் பாதிப்பு இல்லாமல் மீண்டது கடவுள் செயல்” என்றனர். வினுகிருஷ்ணன்- சாந்த்ரா திருமணம் நேற்று நடக்கவில்லை. வேறு தேதி விரைவில் முடிவுசெய்வதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.