ஸ்ரீநகர்,:ஜம்மு – காஷ்மீரில், நான்கு பயங்கரவாதிகள் பற்றி தகவல் தருபவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் சன்மானம் தரப்படும் என, என்.ஐ.ஏ., போஸ்டர் ஒட்டி அறிவித்துள்ளது.
ஜம்மு – – காஷ்மீரில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான டி.ஆர்.எப். எனப்படும் எதிர்ப்பு முன்னணி, நாட்டில் பல இடங்களில் வன்முறை நிகழ்த்த திட்டமிட்டு, இளைஞர்களை திரட்டி மூளைச்சலவை செய்து வருகிறது.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, இரு பாகிஸ்தானியர் உட்பட நான்கு பயங்கரவாதிகளைத் தேடி வருகிறது.
இதற்காக, பாகிஸ்தானைச் சேர்ந்த சலீம் ரெஹ்மானி, சைபுல்லா சஜித் மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த சஜ்ஜத் குல், பசித் அஹ்மத் தார் ஆகிய நான்கு பேரின் பல விபரங்களுடன் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ‘போஸ்டர்’கள் ஒட்டப்பட்டுள்ளன.
தங்களின் தொலைபேசி, ‘வாட்ஸ்-ஆப்’ எண்கள், இ – -மெயில்’ முகவரி ஆகியவற்றை குறிப்பிட்டு என்.ஐ.ஏ., ஒட்டியுள்ள இந்த போஸ்டர்களில், தகவல் அளிப்பவரின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடித்து தள்ளப்பட்ட வீடு
ஜெய்ஜ் – இ – முகமது அமைப்பின் கமாண்டராக செயல்பட்டு வரும் பயங்கரவாதி ஆஷிக் நெங்ரூவுக்கு, 2019ல் நடந்த புல்வாமா தாக்குதலில் தொடர்பு உள்ளது.ஜம்மு – காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ வைப்பது, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது, தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டுவது என, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததை அடுத்து, ஆஷிக்கை தேடப்படும் பயங்கரவாதியாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தில் ராஜ்போரா பகுதியில் இரண்டு அடுக்கு மாடி வீட்டை, எந்தவித அனுமதியும் இன்று அரசு நிலத்தில் ஆஷிக் கட்டியதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதை உறுதி செய்த அதிகாரிகள் நேற்று ஆஷிக் வீட்டை ஜே.சி.பி., உதவியுடன் இடித்து தரைமட்டமாக்கினர். இதையடுத்து, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பினர், ஆஷிக் வீட்டை இடித்த அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement