மாண்டஸ் புயல் எதிரொலி: சென்னையில் ஏற்பட்ட சேதாரங்களும் சீரமைப்பும்.. முழு விவரம்!

சென்னையின் ஹாட் டாப்பிக்காக இருந்த மாண்டஸ் புயல் இதோ அதோ என போக்குக் காட்டி ஒருவழியாக மாமல்லபுரம் அருகே கரையை கடந்திருக்கிறது. கடந்த டிசம்பர் 5ம் தேதி வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், மாண்டஸ் என்ற தீவிர புயலாக வலுப்பெற்றது.
இந்த மாண்டஸ் புயல் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. அதன்படி மாமல்லப்புரம் அருகே மாண்டஸ் டிச.,10ம் தேதியான இன்று அதிகாலை 3 மணியளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயல் கரையை கடந்த நிலையில், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
image
மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னையின் காட்டுப்பாக்கத்தில் 16 செ.மீ மழையும், நுங்கம்பாக்கம், பூந்தமல்லியில் தலா 10 செ.மீ மழையும் பெய்திருக்கிறது. இந்த மழை, புயல் காற்று காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்துக் கிடக்கின்றன.
அதன்படி, மாண்டஸ் புயலால் நேர்ந்த சேதாரங்கள் என்னென்ன என்பதை காணலாம்:
மாண்டஸ் புயலா வீசப்பட்ட பலத்த காற்றால் கடலோர பகுதியில் இருந்த பல வீடுகள் சேதமடைந்திருக்கிறது. கடைகளின் கூரைகள் பறந்தன. சென்னையில் மட்டுமே கிட்டத்தட்ட 95 மரங்கள் சாலைகளில் விழுந்ததாகவும், இவை அனைத்தும் போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்திருக்கிறது.
image
அதேவேளையில் வீசிய காற்றுக்கு மின்கம்பங்கள், நெட்வொர்க் வயர்கள் உள்ளிட்டவை ஆங்காங்கே சேதமடைந்து கிடக்கின்றன. புயல் கரையை கடந்த மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சின்ன சின்ன கடைகளெல்லாம் சின்னாபின்னமாகியிருக்கின்றனவாம்.
இதுபோக அத்தியாவசிய வாகங்கள் தவிர்த்து கிழக்கு கடற்கரை சாலையில் மற்ற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தன. சென்னையில் இருந்து செல்லவிருந்த சிறிய ரக 27 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், சென்னைக்கு வரவிருந்த விமானங்கள் சில பெங்களூரு, ஐதராபாத்துக்கு மாற்றி அனுப்பப்பட்டிருக்கின்றன.
image
புயலின் தீவிரத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என முன்னதாகவே 12 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதேபோல சென்னை மற்றும் விழுப்புரத்தை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் புயல் கரையை கடந்த பிறகு நிலமை சீரானதால் நிறுத்தப்பட்ட போக்குவரத்து சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை காவல்துறையின் அறிக்கைப்படி, மாண்டஸ் புயலால் பெய்த மழையால் சென்னையில் மழைநீர் தேங்குவது, சுரங்கப்பாதைகள் மூழ்குவது போன்றவை ஏதும் நடக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
image
இதனிடையே மாண்டஸ் என்ற பெயரை உலக வானிலை அமைப்பின் உறுப்பினரான ஐக்கிய அரபு அமீரகத்தால் வைக்கப்பட்டிருக்கிறது. அரபு மொழியில் Man-Dous என்ற பெயருக்கு புதையல் பெட்டி (treasure box) என்று அர்த்தமாம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.