வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் நள்ளிரவில் முழுமையாக கரையைக் கடந்தது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 60லிருந்து 70 கிமீவரை சூறைக்காற்று வீசியது. மழையும் கொட்டி தீர்த்தது. தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்து கரையை கடந்தததால் பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை. இதனால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும் இன்னமும் மழை பெய்துகொண்டிருக்கிறது.
இன்றும் நாளையும் மழை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழை காரணமாக சென்னையில் ஆங்காங்கே மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதனை சீரமைக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. இதற்கிடையே புயல் பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறப்பட்டிருந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
புயல் முழுமையாக கரையை கடந்துவிட்டதால் மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்த பகுதிகளில் எப்போது மின் விநியோகம் சீராக்கப்படும் என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது.மேலும், மின் கம்பங்கள் சேதமடைந்த பகுதிகளிலும் சரி செய்து மின் விநியோகம் வழங்க வேண்டுமென பலர் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
புயலால் சேதம் அடைந்த மின்கம்பங்களை ஆய்வு செய்து அவற்றை சரிசெய்து அதன்பின் மின்விநியோகம் வழங்கப்படும்.இன்று மதியத்திற்குள் 100 சதவீதம் முழுமையாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் பணியாளர்கள் மற்றும் சென்னையில் மட்டும் 1,100 மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்” என தெரிவித்தார்.