மூணாறு: மூணாறு அருகே மாட்டுபட்டியில் ஒரு மாதம் இடைவெளிக்கு பிறகு படையப்பா மீண்டும் கைவரிசையை காட்டியது. இரண்டு கடைகள், வேன் ஆகியவற்றை சேதப்படுத்தியது.
மூணாறு பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகளில் பிரபலமான ஆண் காட்டு யானை படையப்பா தீவனத்தை தேடி ரோட்டோரக் கடைகளை குறிவைப்பது வாடிக்கை. மூணாறு அருகே முக்கிய சுற்றுலா பகுதியான மாட்டுபட்டி எக்கோ பாய்ண்ட்டில் கடந்த மாதம் பட்டப்பகலில் ரோட்டோரக் கடைகளில் இருந்து மக்காச் சோளம், பழங்கள் ஆகியவற்றை தின்றது.
ஒரு மாதம் இடைவெளிக்கு பிறகு நேற்று முன்தினம் மாலை மாட்டுபட்டியில் படகு குழாமுக்கு செல்லும் நுழைவு பகுதியில் ரோட்டில் வலம் வந்த படையப்பா ஜான்சன், சுகன் ஆகியோரின் கடைகளை சேதப்படுத்தியதுடன் அன்னாசி பழம், மக்காச்சோளம் ஆகியவற்றை தின்றது.
ரோட்டில் படையப்பா வலம் வந்ததால் மூணாறு, வட்டவடை இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பிறகு தாமாக காட்டிற்குள் சென்ற படையப்பா நள்ளிரவு 1:30 மணிக்கு மாட்டுபட்டி எஸ்டேட் நெற்றிமேடு டிவிஷனுக்குச் சென்றது. அங்கு வீட்டின் முன் நிறத்தியிருந்த ராமர் என்பவருக்குச் சொந்தமான வேனை சேதப்படுத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement