இவர்களுக்கு மானியத்துடன் கடனுதவி – கலெக்டர் தகவல்..!!

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டங்களுள் ஒன்று, மத்திய, அரசின் 60 சதவீத நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் வகைப்பாட்டின் கீழ் அடங்கும் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், ஊறுகாய், வற்றல், அரிசி ஆலை, உலர் மாவு மற்றும் ஈர மாவு தயாரித்தல், உணவு எண்ணெய் பிழிதல், மரச்செக்கு எண்ணெய், பேக்கரி பொருட்கள், தின்பண்டங்கள் தயாரித்தல், மசாலா பொடிகள் தயாரித்தல், பால் பொருட்கள் தயாரித்தல், இறைச்சி மற்றும் மீன் வகைகள் பதப்படுத்தல் போன்ற தொழில்களை தொடங்கவும் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் தொழில் நுட்ப மேம்படுத்தல் செய்யவும் பயன் பெறலாம்.

 

இந்த திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர், ஏற்கனவே உணவுபதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் குறு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன் பெறலாம்.

ரூ.1 கோடி வரையிலான திட்டத்தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதி பெற்றவை. திட்டத்தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தம் பங்காக செலுத்த வேண்டும்.

90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லா கடனாக வழங்கப்படும். அரசு 35 சதவீதம் மானியம், அதிக பட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். சுய உதவி குழுவினர் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும். உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தேவையான பொது கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது வசதியாக்க மையங்களை ஏற்படுத்தவும் திட்ட தொகையில் 35 சதவீதம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.

இது வரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த திட்டம் இனி வரும் காலங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையங்கள் மூலமாகச் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே, ஆர்வமுள்ள தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் இந்த திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் பெற 6, ஏகாம்பரனார் தெரு (புதிய பஸ் நிலைய பின்புறம்), வேதாசலனார் தெரு, செங்கல்பட்டு என்ற முகவரியில் அமைந்த மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.