தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
‘பொது சிவில் சட்டத்தை, ராஜ்யசபாவில் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டிருப்பது, அரசியலமைப்பு சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் கேடான முயற்சி’ என, திருமாவளவன் தெரிவித்துள்ளார். பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தியது, அம்பேத்கர்.
‘பொது சிவில் சட்டமானது, சமதர்ம சமுதாயம் இல்லாத, இந்தியாவின் சமூக அமைப்பை சீர்திருத்தும் சட்டம்’ என்று ஆணித்தரமாக வாதிட்டதோடு, ‘அடிப்படை உரிமைகளையும், பாகுபாடுகளையும் களையும்’ என தெளிவாக சொன்ன அம்பேத்கரின் எண்ணங்களை வலுவிழக்கச் செய்பவர், திருமாவளவன்.
அய்யோ பாவம் திருமாவளவன்… இப்ப என்ன பதில் சொல்லுவார்?
தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பேச்சு:
மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை. அது, மக்களாட்சி தத்துவத்தின் உயிர்நாடி. அதை மதித்து நடக்க வேண்டியது அனைவரது கடமை. சட்டமும், நீதியும் ஒருங்கே செயல்பட்டால் மட்டுமே, மனித உரிமைகளை காக்க முடியும் என்பதை, தி.மு.க., அரசு உணர்ந்து உள்ளது. கட்டுப்பாடான சுதந்திரமே நன்மை பயக்கும்; எதையும் பேசலாம், எழுதலாம் என்பது நல்லதல்ல.
இந்த அறிவுரையை முதல்ல உங்க கட்சியின், ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராஜா, பொன்முடி போன்றவர்களுக்கு சொல்லுங்க!
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாநில செயலர் கவுசிக் பேட்டி:
தேசிய கல்விக் கொள்கையில், ஏராளமான நல்ல விஷயங்கள் உள்ளன. தேசிய கல்விக் கொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஹிந்தி மட்டுமே படிக்க வேண்டும் என, எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை. அரசியல் காரணங்களுக்காக குறை சொல்லக் கூடாது.
திராவிட அரசியல்வாதிகள் குறையை எங்கே சுட்டிக்காட்டுறாங்க… இல்லாததை அல்லவா இட்டுக்கட்டி சொல்றாங்க!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட, ‘மாண்டஸ்’ புயல், தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தாமல், கரையை கடந்து சென்றிருக்கிறது. புயலை எதிர்கொள்ள, தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்படவில்லை. அதற்காக பாராட்டுக்கள்.

தைலாபுரம் வண்டி, அறிவாலயத்துக்கு, ‘ரூட்’ மாறப் போவது அப்பட்டமா தெரியுது!
ஹிந்து மக்கள் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் அறிக்கை:
‘திருவள்ளுவர் மீது காவிச் சாயம் பூசலாம். என் மீது எந்த சாயமும் பூச முடியாது’ என, நடிகர் ரஜினி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் சொல்லியதாக ஞாபகம். அவரது ரசிகர்கள் ஆர்வ மிகுதியால், வள்ளுவர் உருவத்தில் ரஜினி படத்தை அச்சிட்டுள்ளனர்; இதை கண்டிக்கிறேன்.
அரசியல் பூச்சாண்டி காட்டுன காலத்துல ரஜினி பேசினதை எல்லாம், இப்ப ஞாபகப்படுத்தலாமா?
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்