புதுடெல்லி,: அடுத்தடுத்த பண்டிகைகளால் இந்திய தொழில்துறையின் உற்பத்தி வளர்ச்சி குறியீடு சரிவை நோக்கி சென்றுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘இந்திய தொழில்துறை உற்பத்தி குறியீடு (ஐஐபி) கடந்தாண்டு அக்டோபரில் 4.2 சதவீதமாக உயர்ந்து இருந்தது. ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு தொழில்துறையின் வளர்ச்சி வேகமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பரில் தொழில்துறை உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 3.5% ஆக இருந்தது; அதே ஆகஸ்டில் 0.7% ஆக குறைந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் 5.6 சதவீதமாக குறைந்துள்ளது.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் 3.3 சதவீதம் அதிகமாக இருந்தது. இருப்பினும், சுரங்கம் மற்றும் மின் உற்பத்தி முறையே 2.5 சதவீதம் மற்றும் 1.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. நுகர்வோர் பொருள்களின் உற்பத்தி 15.3 சதவீதம் சரிவை கண்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் கடந்த 26 மாதங்களில் கணக்கிட்டால், இந்திய தொழில்துறையின் உற்பத்தி 7.1% அளவிற்கு குறைந்துள்ளது. இதுகுறித்து ஐசிஆர்ஏ-வின் தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகையில், ‘ஐஐபி-யின் குறியீடு எதிர்பார்த்ததை விட சரிவு ஏற்பட்டுள்ளது. இது ஏற்றுமதியின் பலவீனத்தை காட்டுகிறது. அடுத்தடுத்த பண்டிகை கால விடுமுறைகளால் தொழில்துறையின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.