இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் : ஷகிப் அல் ஹசன் ஆடுவது சந்தேகம்

டாக்கா,

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 1-2 என இழந்தது. நாளை இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

இந்திய அணியில் ரோகித் சர்மா காயத்தால் விலகியுள்ளார். இதனால் கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். புஜாரா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மாவுக்குப் பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நாளை போட்டி தொடங்கும் நிலையில் வங்காளதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டியில் உம்ரான் மாலிக் வீசிய பந்து, சாகிப் அல் ஹசன் விலா எழும்பில் தாக்கியது. உடனடியாக ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது, அப்போது ஆபத்து ஏதும் இல்லை எனத் தெரியவந்தது. இன்று பயிற்சி மேற்கொண்டபோது, வலி இருப்பதாக உணர்ந்தார்.

இதனால் பயிற்சியில் இருந்து விலகி எக்ஸ்-ரே எடுப்பதற்கான மருத்துவமனை சென்றுள்ளார். இன்று மாலை தான் முடிவு தெரியும். அதன் பின் ஷகிப் அல் ஹசன் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும் என வங்காளதேச அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.