சேலத்தில், இறந்த பெண்ணுக்கு மூன்று நாட்கள் சிகிச்சை அளித்ததாகக் கூறி, தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவருடைய மனைவி வனிதா. இந்தத் தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு வனிதாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி வனிதாவின் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு மாதேஸ்வரன் சென்றுள்ளார்.
பின்னர், வனிதா தானாகவே பேசிக்கொண்டிருந்ததால் தர்மபுரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர், அவருக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியதாக தெரியவருகிறது. இதையடுத்து வனிதாவை, மாதேஸ்வரன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் வனிதாவின் உறவினர்கள் தகராறு செய்த நிலையில் மீண்டும் அவரது கணவர் சேலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்துள்ளார்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மூன்று நாள்களுக்கு முன்பே வனிதா உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், உறவினர்களிடம் வனிதா இறந்ததை தெரிவிக்காமல் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் தவணை முறையில் பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வனிதா நேற்று மாலை விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கு மேற்பட்ட உறவினர்கள் மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்த நபருக்கு மூன்று நாட்களாக சிகிச்சை அளித்தாக வருவதாக உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த அஸ்தம்பட்டி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட வனிதாவின் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வனிதாவின் உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.