தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. பெண்கள், ஆதரவற்ற விதவைகள், முன்னாள்/ இராணுவத்தினர், தமிழ் வழியில் பயின்றோர், மாற்றுத் திறனாளிகள் போன்ற சிறப்பு பிரிவு விண்ணபப்தாரர்களுக்கு நடைமுறையில் உள்ளஅரசு ஆணைகளின் படி முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி அரசுப் பணியாளர் தேர்வில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கவுதம் சித்தார்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவை ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவர், தனது மனுவில், ” கடந்த மார்ச் மாதம் 7382 குரூப் 4 நிலை காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டது. இந்த அறிவிக்கையில், கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு எந்தவித முன்னுரிமையும் அறிவிக்கப்பட வில்லை. இது சமூக நீதிக்கு எதிராக உள்ளது. எனவே, இந்த அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது . இந்த வழக்கில் பதிலளித்த தமிழ்நாடு அரசு, “வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பப்படும் காலிப் பணியிடங்களில் மட்டுமே கலப்புத் திருமனம் செய்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி போன்ற பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வில்லை. இது, தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுகளில் ஒன்று” என்று தெரிவித்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.