புதுடில்லி:சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத் துறைக்கு ‘நோட்டீஸ்’ அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடம் பண மோசடி செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,அமலாக்கத் துறையின் சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, பண மோசடி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இது குறித்து பதில் அளிக்கும்படி செந்தில் பாலாஜிக்கும், அமலாக்கத் துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement