”சாதி சான்றிதழ் இருந்தால் பலர் டாக்டர், வக்கீல் ஆகியிருப்பாங்க”-பழங்குடி மக்களின் அவலநிலை!

”உதவிக்கு வழி இன்றி மற்றவர் கொடுக்கும் உடையை உடுத்தி வாழும் அவல நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம். அடுத்த தலைமுறையாவது முன்னேற அரசு எங்களுக்கு உதவ வேண்டும்” என சாதி சான்று ஒன்று இல்லாததால் கனவை தொலைத்து வருகின்றனர் வேலூர் பழங்குடியின மக்கள். மேலும் இவர்கள் வசிக்க தகுதியற்ற இடத்தில் குழந்தைகளோடு வாழ்ந்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. 
வேலூர் மாவட்டத்தில் பொன்னை குகையநல்லூர், ஒட்டன் ஏரி, எம்லால் ஊர் ஆகிய பகுதிகளில் சுமார் 100- க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை வசிக்க வீடு, நிரந்தர வீட்டுமனை, பட்டா இல்லாமலும் ஆதரவின்றியும் வசித்து வருகின்றனர். இவர்கள் வசித்துவரும் பகுதி வாழ தகுதியற்ற இடமாகவே இருந்து வருகிறது. பனை ஓலையால் நெய்யப்பட்ட கூரை வீடுகள் பொத்தலாகி மழைக்கு தாங்காத நிலையில் உள்ளது. இதிலேயே பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். நீட்டிப்படுத்தால் கால் எட்டாத அளவுல்ல வீட்டில் நிம்மதியான உறக்கம் இன்றியும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தலைமுறை தலைமுறைகளாக தங்கள் வாழ்வு சிறிதேனும் மாறாதா என்ற ஏக்கத்தில் உள்ளனர் பழங்குடியின மக்கள்.
image
இது குறித்து நந்தினி கூறுகையில்,
“எனக்கு படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் என்னால் 8 வது வரை தான் படிக்க முடிந்தது. அதற்குமேல் படிக்க சாதி சான்றிதழ் கேட்டார்கள். அது இல்லாததால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தாத்தாவோடு விறகு வெட்ட கூலி வேலைக்கு செல்கிறேன். எனக்கும் மற்றவர்களை போன்று டாக்டர் ஆக வேண்டும் என ஆசைதான். இப்போது எனக்கு பின்னால் வருபவர்களுக்கும் சாதி சான்றிதழ் இல்லாததால் படிப்பு தடைபட்டு வருகிறது” எனக் கூறினார்.
image
அஞ்சலை கூறுகையில், ”குடும்ப அட்டை மற்றும் பட்டா கேட்டு பலமுறை அலைந்துள்ளோம். இதுவரை உரிய பதில் இல்லை. ஆதார் அட்டை கூட இல்லாமல் இருக்கிறோம். கடையில் தான் பத்து ரூபாய் கொடுத்து அரிசி வாங்கி சாப்பிடுகிறோம். மழைகாலத்தில் வீடுகள் முழுவதுமாக ஒழுகுவதால் குழந்தைகளை வைத்துக்கொண்டு படுக்க முடியவில்லை. பூச்சி புழு தொல்லை அதிகமாக உள்ளது” என்றார்.
image
சம்பத் என்பவர் கூறுகையில், ”விறகு வெட்டும் தொழிலுக்காக காலை 6:00 மணிக்கு சென்றால் இரவு ஏழு ஆகிவிடும். ஒரு சில நாட்களில் 10:00 மணி கூட ஆகிவிடும். வயதாகி விட்டதால் இப்போதெல்லாம் என்னால் வேலைசெய்ய முடியவில்லை. வீடு வசதியுடன் வாழ்பவர்களை பார்க்கும்போது அவர்கள் பெற்றோர் அவர்களுக்கு சம்பாதித்து வைத்துள்ளார்கள். ஆனால் நமது பெற்றோரின் நிலைதான் நமக்கும் தொடர்கிறது என ஏங்க தோன்றும். எங்களது வாழ்க்கை மாறவேண்டும் என ஆசைதான். தேர்தல் சமயத்தில் மட்டும் வருகிறார்கள். அதற்கு பிறகு கண்டுகொள்வதில்லை. தலைமுறை தலைமுறையாக இந்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வருகிறோம். எப்படி வாழ்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. அரசு தான் எங்களுக்கு உதவவேண்டும். இல்லை என்றால் காலத்துக்கும் பிள்ளை குட்டிகளோடு இதே நிலையில்தான் நாங்கள் வாழ வேண்டி இருக்கும்” என்கிறார்.
image
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் வேலூர் செயலாளர் மகாலிங்கம் கூறுகையில், ”இன்றைக்கு பெரும்பாலான பழங்குடியின மக்கள் சோலைகளிலும் கட்டுமான தொழிலாளர்களும் கொத்தடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வந்து மரம் வெட்டும் தொழிலுக்காக தங்கி வாழ்ந்து வருகின்றனர். சமயங்களில் ஆந்திராவில் செம்மரம் வெட்டுவதாகக்கூறி கைது செய்து வருகிறார்கள். பழங்குடியின மக்கள் நலனுக்காக வேலூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் 32 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் அது முறையாக செலவழிக்கப்படவில்லை. குகைநல்லூரில் வசிப்பவர்களுக்கு முறையான வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, நிவாரண பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள பழங்குடியினருக்கு இனச் சான்று விரைந்து வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
image
நதியா என்பவர் கூறுகையில், ”நாங்கள் வாழும் இடம் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை. கர்ப்ப காலத்தில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்து செல்லவேண்டிய சூழல் உள்ளது. இன்றைய காலத்தில் எங்களுக்கு யாரும் ஈவு இரக்கம் காட்டுவதில்லை. எங்களுக்கான சாதி சான்றிதழ் இல்லாததால் பள்ளியில் ஐந்தாம் வகுப்பைத் தாண்ட முடியவில்லை. என்னால் சாதி சான்றிதழ் இல்லாததால் எட்டாம் வகுப்பிற்கு மேல் படிப்பை தொடர முடியாததால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டேன். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கிறோம். நான் பொய் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் உடுத்தும் உடை கூட மற்றவர்கள் கொடுத்த உடை தான்.
image
இப்படியான அவல நிலையில்தான் எங்கள் வாழ்வு உள்ளது. எங்களது வாழ்க்கையை கொடுமையாகவே நினைக்கிறோம். மற்றவர்களைப் பார்த்து எங்களுக்கு தோன்றும் ஆசைகளை எல்லாம் மண்ணில் போட்டு புதைத்து விடுகிறோம். சாதி சான்று என்ற ஒன்று இருந்திருந்தால் எங்களில் பலர் ஆசிரியர், மருத்துவர், வக்கீல் என பல துறைகளில் வேலையில் இருந்திருப்பார்கள். எங்களால் முடியாததை எங்கள் பிள்ளைகளுக்காவது செய்ய வேண்டுமென ஆசைப்படுகிறோம் அதற்கு அரசு உதவ வேண்டும்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.