கோல்கட்டா :கோல்கட்டாவில் தொழிலதிபர் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் போல் நடித்து, 30 லட்சம் ரூபாய் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள போவனிபோர் பகுதியில் தொழிலதிபர் சுரேஷ் வாத்வா, 60, வசித்து வருகிறார். இவர் வீட்டில் நேற்று நுழைந்த ஏழு பேர் கும்பல், தங்களை சி.பி.ஐ., அதிகாரிகள் எனவும், ‘ரெய்டு’ நடத்த வந்திருப்பதாகவும் கூறி, 30 லட்சம் ரூபாய் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அள்ளிச் சென்றனர். அவர்கள், பறிமுதல் செய்த நகை, பணம் குறித்த விபரங்களை தராததை அடுத்து சந்தேகமடைந்த வாத்வா, போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
வீட்டில், பணம், நகைகள் எங்கே வைக்கப்பட்டிருக்கும் என்பதை அறிந்தே கொள்ளை நடத்தப்பட்டுள்ளது. எனவே, தொழிலதிபரின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள், இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம். வீட்டில் உள்ளவர்கள் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, கொள்ளையர்கள் வந்த மூன்று வாகனங்கள் குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement