நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளிமண்டல பகுதியில் சிறப்பு வாய்ந்த ஆனிக்கல் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில் சிறப்பு வழிபாடு நாள்களில் மட்டுமே நடை திறக்கப்படுகிறது. கார்த்திகை தீப திருவிழா சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றுள்ளது. நீலகிரியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றுள்ளனர். வழிபாடு முடிந்ததும் வீடு திம்பவதற்காக ஆனிக்கல் நீரோடையைக் கடக்க முயற்சி செய்துள்ளனர். நீலகிரி மலையில் பெய்த கனமழை காரணமாக நீரோடையில் அளவுக்கு அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதை அறியாமல் முதலில் கடக்க முயன்ற 4 பெண்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக பின்வாங்கியுள்ளனர். வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நள்ளிரவில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த பக்தர்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் கூட்டாக இணைந்து பத்திரமாக மீட்டனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஜெக்கலொரை கிராமத்தை சார்ந்த சரோஜா, வாசுகி, விமலா, சுசிலா ஆகிய பெண்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.