போபால்: மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜா படேரியா. இவர் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பன்னா மாவட்டம், பவாஸ் நகரில் நடந்த காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் இவர் பேசிய ஆடியோ ஒன்று நேற்று வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது.
அந்த வீடியோவில் ராஜா படேரியா பேசும்போது, ‘‘தலித்கள், பழங்குடியினர், சிறுபான்மை இனத்தவர்கள் அச்சுறுத்தலில் உள்ளனர். அவர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி அழித்துவிடுவார். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று விரும்பினால், அவரை கொலை செய்ய நீங்கள் எல்லாம் தயாராக இருங்கள்; அதாவது அவரை தோற்கடிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் கூறுகிறேன்’’ என்று பேசியுள்ளார்.
இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ராஜா படேரியா மீது வழக்கு பதிவு செய்ய மாநில பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறும்போது, ‘‘தேர்தலில் காங்கிரஸால் பிரதமர் மோடியை தோற்கடிக்க முடியவில்லை. அதனால்தான் படேரியா இதுபோல் பேசுகிறார். இதுதான் வெறுப்பின் உச்சகட்டம்’’ என்றார்.