மாயமான மலேஷிய விமானம் புதிய அதிர்ச்சி தகவல் வெளியானது திட்டமிட்டு விமானி மூழ்கடித்ததாக சந்தேகம்| Dinamalar

கோலாலம்பூர் :எட்டு ஆண்டுகளுக்கு முன், நடுக்கடலில் மாயமான ‘மலேஷியா ஏர்லைன்ஸ்’ விமானத்தை, அதன் விமானிகள் திட்டமிட்டு கடலில் மூழ்கடித்திருக்கலாம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

ஆசிய நாடான மலேஷியாவின் கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் பீஜிங் நகருக்கு, மலேஷிய விமான நிறுவனத்தின் எம்.எச்., – ௩௭௦ விமானம் இயக்கப்பட்டது.

இந்த விமானம், ௨௦௧௪ மார்ச் ௮ம் தேதி கடல் பகுதிக்கு மேல் பறந்த போது மாயமானது. இதில், ௨௩௯ பேர் இருந்தனர்; பெரும்பாலானோர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.மாயமான விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால், இதுவரை பெரிய அளவில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கிழக்கு ஆப்ரிக்க நாடான மடகாஸ்கரில் ஒரு மீனவர் வீட்டில் இருந்து, விமானத்தின் கதவு ஒன்று சமீபத்தில் மீட்கப்பட்டது. விசாரணை நடத்தியதில் அந்த கதவு, மாயமான மலேஷிய விமானத்தின் கதவு என்பது உறுதி செய்யப்பட்டது.

கடந்த ௨௦௧௭ல் ஏற்பட்ட புயலின் போது இந்தக் கதவு கரை ஒதுங்கியதாகவும், இதை, அந்த மீனவர் தன் வீட்டில் துணி துவைப்பதற்கு பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அந்தக் கதவு குறித்து விமான நிபுணர்கள் பரிசோதனை நடத்தினர். அவர்கள் கூறியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:

தற்போது கிடைத்துள்ள இந்த விமானத்தின் கதவு முக்கிய ஆதாரமாக இருக்கும். விமானத்தின் சக்கரம் இருக்கும் பகுதியில் இந்தக் கதவு மற்றும் அதனுடன் சில இயந்திரப் பாகங்களும் கிடைத்துள்ளன.இவற்றை ஆராய்ந்தபோது, இதில் பலத்த சேதங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. வழக்கமாக அவசர காலத்தில், விமான சக்கரத்தின் கதவுகளை விமானிகள் இயக்க மாட்டார்கள்.

குறிப்பாக கடல் பகுதியில் அதை இயக்க மாட்டார்கள். அவ்வாறு இயக்கினால், விமானத்துக்கு அதிக சேதமும், மிக விரைவாக மூழ்கும் அபாயமும் உள்ளது.தற்போது கிடைத்துள்ள பொருளை ஆராய்ந்ததில், அதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த விமானம், மிக அதிக வேகத்தில் கடலில் வேகமாக மோதியதில், பல துண்டுகளாக உடைந்துள்ளது. இதனால், விமானிகள் திட்டமிட்டு கடலில் விமானத்தை மோதியிருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.