ராஜபாளையத்தில் பரபரப்பு நெல்லை – தாம்பரம் எக்ஸ்பிரஸ் மீது மின் கம்பி அறுந்து விழுந்தது: 2 மணி நேரம் தாமதத்தால் பயணிகள் அவதி

ராஜபாளையம்: மின்கம்பி அறுந்து விழுந்ததால், நெல்லை – தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில்  ராஜபாளையத்தில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. நெல்லையில் இருந்து தென்காசி வழியாக சென்னை தாம்பரத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் (வண்டி எண் – 06004) இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் இரவு நெல்லையில் இருந்து புறப்பட்டு தென்காசி வழியாக தாம்பரத்திற்கு வந்து கொண்டிருந்தது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே, இரவு 10 மணியளவில் வந்தபோது, ரயில் பெட்டியில் ஏதோ உரசுவது போல பயங்கர சத்தம் கேட்டுள்ளது.

அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் ரயிலை நிறுத்தி பார்த்தார். அப்போது ரயில் பெட்டி மீது உயரழுத்த மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. மதுரையிலிருந்து கொல்லம் வரை தற்போது உயர் மின்னழுத்த கம்பி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மின்கம்பிதான் அறுந்து விழுந்துள்ளது. மின்சப்ளை கொடுக்காததால் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த ரயில்வே பணியாளர்கள் அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த கம்பியை அப்புறப்படுத்தினர். இதனால் 2 மணி நேரம் தாமதமாக இரவு 11.45 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இதனால், பயணிகள் அவதிப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.