ரூ.73 கோடியில் பழநி கோயிலில் நவீன ரோப் கார் வசதி: 1 மணி நேரத்தில் 1200 பேர் பயணிக்கலாம்

பழநி: பழநி கோயிலில் ரூ.73 கோடியில் அமைக்கப்படும் நவீன ரோப்காரில் 1200 பேர் வரை பயணிக்கலாம் என்பதால் இனி காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்காது. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்வதற்கு வசதியாக மேற்கு கிரிவீதியில் இருந்து வின்ச், தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்கார் இயக்கப்படுகிறது.

தமிழகத்தில் முதன்முதலில் பழநி கோயிலில்தான் ரோப் கார் அமைக்கப்பட்டது. ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் 2004ல் துவங்கப்பட்ட தற்போதைய ரோப் காரின் பயண நேரம் 3 நிமிடம் ஆகும். ஜிக்-பேக் முறையில் மேலே செல்லும் போது 15 பேரும், கீழே இறங்கும்போது 13 பேரும் மட்டுமே பயணிக்க முடியும். 1 மணி நேரத்தில் சுமார் 400 பேர் மட்டுமே தற்போதைய ரோப் காரில் பயணிக்க முடியும். இதனால் வார விடுமுறை தினம், கார்த்திகை, சஷ்டி மற்றும் விழா காலங்களில் ரோப்காரில் பயணிக்க பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. மழை மற்றும் காற்று காலங்களில் தற்போதைய ரோப்காரை இயக்க முடியாது.

எனவே, பழநி கோயிலுக்கு கூடுதலாக 2வது ரோப் கார் அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து ரூ.73.83 கோடி மதிப்பீட்டில் 2வது ரோப்கார் அமைக்க அரசு ஒப்புதல் அளித்தது. சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் நிறுவனத்துடன் இணைந்து ரோப்கார் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட உள்ள ரோப்கார் நவீன வசதிகளுடன் 1 மணி நேரத்தில் சுமார் 1200 பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. மழை மற்றும் காற்று காலங்களிலும் தடையின்றி இயக்க முடியும்.

தற்போதைய ரோப் காரின் கிழக்கு பகுதியில் 2வது ரோப்கார் நிலையத்திற்கான கட்டுமான பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. நிறைவடைந்தவுடன் பிரான்ஸ் நாட்டில் இருந்து கப்பல் மூலம் 2வது ரோப்காருக்கான இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட உள்ளது. பழநி கோயில் சார்பில் 2வது ரோப்கார் பணியை கண்காணிக்கவும், மேலாண்மை செய்யவும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக தற்போதுள்ள ரோப்காரில் பயணிக்க கூட்ட நேரங்களில் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். ஆனால், தற்போது அமைக்கப்படும் புதிய ரோப்காரில் 1 மணி நேரத்தில் 1200 பேருக்கு மேல் பயணிக்கலாம் என்பதால் இனி அதிகநேரம் காத்திருக்க வேண்டிய நிலை இல்லை என்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.