தமிழகத்தில் புகழ்பெற்ற பழைமையான வைணவத் தலங்களில் ஒன்று வீரவநல்லூர் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயில். இந்த தலத்தில் பெருமாள் தனது திருதேவியர் சுந்தரவல்லி அம்பாள் மற்றும் சுந்தரநாயகி அம்பாளுடன் சுந்தர வடிவமாய் பக்தர்களுக்கு அருள்கிறார்.

முன்னொரு காலத்தில் காசியப முனிவர் என்ற தீவிர வைணவ பக்தர் ஒருவர் வைணவ ஆலயங்களுக்கு சென்று எம்பெருமானை தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறாகவே திருமாலிருஞ்சோலையில் கள்ளழகரை வழிபட்டுவிட்டு தென்பக்கம் நோக்கி நடந்த போது ஓரிடத்தில் தியான நிலையில் அமர்ந்து “என்றும் உமது திருதரிசனத்தை பெறுவதே எமது புண்ணியம்” என்று ஆதிநாராயணரை மனமுருகி வேண்டிக்கொண்டார். இவரது பக்திக்கு மெச்சிய அலங்கார பிரியர் சுந்தர வடிவமாய் தமக்கே உரிய அலங்கார ரூபமாய் வைர வைடூரிய ஆபரணங்களுடனும் தமது திருதேவியருடனும் காசியப முனிவருக்குக் காட்சி கொடுத்தார். கண்களில் நீர் பெருக உடம்பெல்லாம் மயிர் கூச்சரிய சுந்தரராஜ பெருமாளை மனமுருக பக்தி பெருக்குடன் வழிபட்டார் காசியப முனிவர்.

தமக்கு சுந்தர வடிவமாய் காட்சியளித்த எம்பெருமான் இதே இடத்தில் இனிவரும் பக்தர்கள் அனைவருக்கும் சுந்தரராஜனாய் அருள் தர வேண்டும் என்று எம்பெருமானை கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க நாராயண பகவான் சுந்தர வடிவமாய் சுந்தரராஜ பெருமாளாய் தமது துணைவியர் அம்பாள் சுந்தரவல்லி மற்றும் சுந்தரநாயகி அம்பாளுடன் இன்றும் பக்தர்களுக்கு அருள்கிறார். சிறிய கருவறை மட்டும் அமைய பெற்றிருந்த இந்த ஆலயத்தை பிற்காலத்தில் பாண்டிய வழி மன்னர்கள் சீரமைத்து வழிபட்டனர். காசியப முனிவரின் தவத்தால் அமையப்பெற்ற தலம் என்பதால் இத்தலம் காசியப சேத்திரம் என்றே அழைக்கப்படுகிறது.
சுந்தரராஜ பெருமாளின் தீவிர பக்தன் பாண்டிய மன்னன் வீரமாறன். ஒருமுறை இத்தலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாளை வணங்கி விட்டு இத்தலத்திற்கு அருகிலுள்ள காட்டிற்கு வேட்டைக்குச் சென்றான். வேட்டைக்குச் செல்ல முற்பட்டபோது அவன் கண்ட காட்சி அவனை அதிசயித்தது. அங்கு ஒரு சிறிய முயல் ஒன்று பெரிய வேட்டை நாயைத் துரத்திச் சென்றது; வேட்டை நாயும் முயலுக்கு பயந்து ஓடியது. இதைப் பார்த்த வீரமாறன் அந்த முயலுக்கு பின்னாலயே ஓடிச் சென்றான். ஆனால், முயலையும் அந்த வேட்டை நாயையும் அவனால் காண இயலவில்லை.
முயல் நாயை துரத்திச் சென்ற இந்த மண்ணின் வீரத்தை உணர்ந்த மன்னன் இந்த மண்ணுக்கு வீர கலநல்லூர் என்று பெயரிட்டான். அதுவே பின்நாளில் வீரவநல்லூர் என்று மருவி வழங்கப்படுகிறது. இந்த மண்ணின் வீரத்தை உணர்ந்த மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனும் இவ்வூரில் உள்ள பூமிநாதரையும் சுந்தரராஜ பெருமாளையும் வணங்கினார் என்கின்றனர் அங்குள்ள கிராம மக்கள்.
ஊரின் நடுவே கோயில் கொண்டு அழகாக சுந்தர வடிவத்துடன் காட்சி தருகிறார் சுந்தரராஜ பெருமாள். திருக்கோயிலின் கிழக்கு நோக்கிய கருவறையில் அம்பாள் சுந்தரவல்லி மற்றும் சுந்தரநாயகி அம்பாளுடன் அழகாய் வீற்றிருக்கிறார் சுந்தரராஜ பெருமாள். தமது இரு கரங்களிலும் சங்கு சக்கரத்தை ஏற்றியவராக காட்சியளிக்கிறார். கருவறையின் வலப்பக்கத்தில் ஆஞ்சநேய பகவான் வணங்கியபடி காட்சியளிக்கிறார். உற்சவ மூர்த்தியுடன் லெட்சுமி ஹயக்ரீவர் கோயில் கருவறைக்கு வெளியே வலப்பக்கத்தில் அருள்புரிகின்றனர். கோயிலின் இடப்புற வெளிப்பிராகரத்தில் நரசிம்ம பகவான் அருள்புரிகிறார்.

ஸ்ரீநவநீத கிருஷ்ணன், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ வேதாந்த தேசிகர், ஸ்ரீ சேனை முதலி என அனைத்து ஆழ்வார்களின் சன்னதிகளும் கோயிலின் வலப்புற பிராகாரத்தில் அமைந்துள்ளது.
கோயிலுக்குப் பின்புறம் குளிர்ச்சியாய், காண்பதற்கு அழகாய் அமைந்துள்ளது தெப்பக்குளம். வருஷாபிஷகம் முடிந்தபின் தெப்பத்திருவிழா கோலாகலமாய் நடைபெறுமாம். கோயிலுக்கு வெளியே இடப்புறமாய் பாழடைந்த நிலையில் நிற்கிறது கோயிலின் பழைய பெரிய தேர் ஒன்று. இங்கு சனி கிழமைகளில் கருட தரிசனம் சிறப்பாக நடைபெறும் மற்றும் புரட்டாசி மாதங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது. வாராவாரம் புதன் கிழமைகளில் ஹயக்ரீவ வழிபாடும் நடைபெறுகிறது.
கல்வியில் சிறந்து விளங்க புதன் கிழமையில் இங்குள்ள லெட்சுமி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி
“ஓம் வகீஸவராய வித்மஹே!
ஹயக்ரீவாய திமஹி
தன்னோ ஹம்சத் பிரசோதயாத்!
ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே”
என்ற மந்திரத்தை உச்சரித்தால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்கின்றனர். மற்றும் கிருஷ்ண ஜெயந்தி ஆஞ்சநேய ஜெயந்தி போன்ற பண்டிகை நாட்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

எப்படி செல்லலாம்? திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது வீரவநல்லூர். அங்கு ஊரின் நடுவே அழகுற அருள்புரிகிறார் சுந்தர்ராஜ பெருமாள்.
வைணவ பக்தர்கள் திருநெல்வேலி பக்கம் சென்றால் சுந்தரராஜ பெருமாளை தரிசித்து வாருங்கள்.