சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைக் கண்டித்து மதுரை மாநகர அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய, முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான செல்லூர் ராஜூ, “பல்வேறு கோரிக்கைகளைக் கூறிவிட்ட, அவற்றை நிறைவேற்றாத அரசின் செவிகளுக்கு எட்டும் வகையில்தான் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடைபெறுகிறது.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதவர்கள் தி.மு.க-வினர். மகளிருக்கு ஆயிரம் ரூபாய், காஸ் மானியம், கல்விக் கடன் ரத்து, விலைவாசி உயர்வு என எதையுமே செய்து தரவில்லை. ஆனால், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று வாக்குறுதியில் சொல்லவில்லை.
அ.தி.மு.க ஆட்சியில் மின்சாரக் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிப்பதாகக் கூறிய முதல்வர், தற்போது 54 சதவிகிதம் உயர்த்தியிருக்கிறார். சொத்துவரிக்கு வீட்டையே விற்கும் நிலை உள்ளதாக பேசிய ஸ்டாலின், இன்று சொத்துவரியையும் உயர்த்தியிருக்கிறார்.
முதல்வரோடு கூட்டணி வைத்துருப்பவர்கள் இன்றைக்கும் பக்கவாத்தியம் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் இருக்கும்வரை உதயசூரியன்தான் உதிக்கும் எனக் கூறுகிறார். உதயசூரியன் எரிக்கத்தான் செய்யும். மக்களுக்கு வெயிலை கொடுப்பதை போல ஆட்சியை கொடுத்து கொண்டிருக்கின்றனர்.

தமிழக மக்கள் படும் துயரம் போதாதாம், இதில் புதுச்சேரியிலும் திமுக ஆட்சி என முதல்வர் கூறுகிறார். இங்கே நடக்கும் கொடுமைகள் போதாதா? கொடுமையிலும் கொடுமையாக புதுச்சேரி மக்களும் துன்பப்பட நினைக்கிறார். திருக்குவளை மு.கருணாநிதி குடும்பம்தான் தி.மு.க., ஸ்டாலினின் பிரைவேட் கம்பெனிபோல மாறிவிட்டது.
நாளை உதயநிதியின் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. மகனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதால் ஸ்டாலின் அனைத்து வரிகளையும் ரத்துசெய்ய வேண்டும். உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பின்போது விலை வாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை சரி செய்வேன் என ஞானஉதயம் வந்து மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என மீனாட்சியம்மனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

மன்னராட்சி காலத்தில் இளவரசருக்கு பட்டாபிஷேகம் செய்யும்போது குறுநில மன்னர்களுக்கு வரி விலக்கு அளிப்பதுபோல உதயநிதி அமைச்சராக பதவியேற்பதை முன்னிட்டு சொத்து வரி உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை ரத்து செய்து மக்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். அதிகார தெம்பில், போதையில் இதையெல்லாம் ஸ்டாலின் செய்கிறார்.
சென்னையின் முதல் குடிமகளான மேயரை தொங்கவிட்டு முதல்வர் காரில் வசதியாக செல்கிறார். சர்வாதிகார ஆட்சி போல தி.மு.க ஆட்சி இருக்கிறது. இவர்கள் திராவிட மாடலைப் பற்றி பேசுகிறார்கள். ஒரு நாள் இரவு பயணத்துக்கு லட்சக்கணக்கில் செலவழித்து ரயில் பயணம் செய்கின்றனர். மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர். பொங்கலுக்குத் தரமான பொருள்களை அ.தி.மு.க கொடுத்தது. தி.மு.க-வோ அல்வாதான் கொடுத்தது. வாயிலேயே அல்வா கிண்டும் ஆட்சியாக இருக்கிறது.
கட்சியில் இவ்வளவு பிரிவினைகள் வந்தும் அ.தி.மு.க-வினர் கட்சி மாற மாட்டார்கள். புடம்போட்ட தங்கங்கள் அ.தி.மு.க தொண்டர்கள். சுயநலத்துக்காக தலைவர்கள், நிர்வாகிகள் மாறுவார்கள். ஆனால் அ.தி.மு.க தொண்டர்கள் ஒருபோதும் கட்சி மாற மாட்டார்கள். ஸ்டாலின் அவர் அப்பா பெயரைச் சொல்லி பேச முடிகிறதா? எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்கிறார். எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லாமல் இங்கு யாராலும் அரசியல் செய்ய முடியாது. அதனால்தான் எம்.ஜி.ஆரை பெரியப்பா என ஸ்டாலின் பேசுகிறார்.
தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. தி.மு.க-வுக்கு சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும். நாடாளுமன்றத்தை முடக்கிய அ.தி.மு.க எங்கே? எது குறித்தும் விவாதிக்காமல் உள்ள தி.மு.க எங்கே?

காவல்துறையினர் அ.தி.மு.க-வினரை சீண்டிப்பார்க்காதீர்கள். தேனீக்கள் போல அமைதியாக இருப்போம். பிறகு கொட்டி விடுவோம். எங்கள் கட்சியினர் காவல்துறையினருடன் தகராறு என்று செய்தி வர விரும்ப மாட்டார்கள்” என்றார்.