அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்திருக்கிறார். படமானது பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கு அடுத்ததாக யாரும் எதிர்பார்க்காத வகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கவிருக்கிறது. நானும் ரௌடிதான் என்ற மெகா ஹிட் கொடுத்த விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து எந்த ஜானரில் கதை செய்திருக்கிறார் என்ற ஆவல் பலரிடம் இப்போதே எழுந்திருக்கிறது. தற்போது படத்தின் கதை இறுதி செய்யப்பட்டதாகவும், விரைவில் ஷூட்டிங் செல்வார்கள் எனவும் தெரிகிறது.
இதற்கிடையே, க்ளீன் ஷேவிங்கில் அஜித் இருக்கும் புகைப்படம் வெளியாகி அதுதான் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் அஜித்தின் கெட் அப் என்ற பேச்சும் சமூக வலைதளங்களில் எழுந்தது. ஆனால் அது உறுதியானதா என்பது தெரியவில்லை. படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக படக்குழு எதையும் தெரிவிக்கவில்லை. நானே வருவேன் படத்தில் தனுஷ் வில்லன் ரோலில் மிரட்டியிருந்தார். இதனால் அஜித்துக்கு அவர் வில்லனாக நடித்தால் அந்த காம்பினேஷன் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
முன்னதாக, தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் மற்ற ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் ஆரோக்கியமான விஷயம் சமீபமாக அதிகரித்திருக்கிறது. பேட்ட, மாஸ்டர், விக்ரம் படங்களில் விஜய் சேதுபதி நடித்து அதற்கான விதையை ஆழமாக விதைத்தார்.
அவரது வழியில் நடிகர் சூர்யா லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்படி பலரும் அடுத்த ஹீரோக்கள் படங்களில் நடிப்பதால் தனுஷும் அவ்வாறு நடிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக பேசப்படுகிறது.