சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இன்று இணையும் உதயநிதி ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதற்காக ஆளுநர் மாளிகையில் கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை கடந்தாண்டு மே மாதம் பொறுப்பேற்றது. ஒன்றரை ஆண்டுகள் கழித்து, தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன்படி திமுக இளைஞரணி செயலாளரும், முதல்வரின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சரவையில் தற்போது இடமளிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2009-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவையில் முதன் முதலாக, ஸ்டாலினுக்கு அவரது 56-வது வயதில் இடம் கிடைத்தது. ஆனால், உதயநிதி தனது 46-வது வயதிலேயே இடம் பிடித்துள்ளார்.
இதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில், முதல்வர் முன்னிலையில், அமைச்சராக உதயநிதி பதவியேற்கிறார். அவருக்கு, பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்காக கோலாகலமான ஏற்பாடுகள் ஆளுநர் மாளிகையில் நடந்து வருகிறது. விழாவில் அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பேரவை கட்சித் தலைவர்கள்,எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக முக்கிய நிர்வாகிகள், முதல்வர் குடும்பத்தினர் பங்கேற்கின்றனர்.
பதவியேற்பு விழா முடிந்ததும், அங்கிருந்து தலைமைச் செயலகம் வரும் உதயநிதி, காலை 10.15 மணிக்கு அவரது அறையில், அமைச்சராக பொறுப்பேற்கிறார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
விழாவில் கட்சியினர் யாரும் பங்கேற்க வர வேண்டாம் என்றும் நிகழ்ச்சிகளை எளிமையாக நடத்திமுடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, அமைச்சரவையில் சில மூத்த அமைச்சர்களுக்கு துறை பொறுப்புகள் மாற்றம் இருக்கும் என்றாலும் அதிகாரப்பூர்வ பட்டியல் இன்னும் வெளியாகவில்லை.