உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதை கொண்டாடும் வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் இனிப்புகளை வழங்கிய பின் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது , பேசிய அவர், “ திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்பது அனைவரின் நம்பிக்கை. நிறைய அனுபவங்கள் பெற்றிருக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது.
முத்தமிழ் அறிஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் சிறிய வயதில் இருந்து அவரை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பும், நம் முதலமைச்சர் துணை முதலமைச்சராக மேயராக இன்று முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கும்வரை அவருடன் நெருக்கமாக இருந்து நிர்வாகத் திறனை பார்க்கும் வாய்ப்பு பெற்றவர். எனவே ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தின் செல்லப் பிள்ளை அவர். கலைஞரின் பேரப்பிள்ளை எதிர்கால தமிழர்களின் முகவரியாக திகழக் கூடியவர்.
உதயநிதி ஸ்டாலின் சிறப்பான முறையில் பணியாற்றி தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கருணாநிதி, இனமான பேராசிரியர் முரசொலி மாறன் போன்ற தலைவர்கள் எல்லாம் இந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் செயல்பட்டது போன்று இன்று பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வழியில் பயணத்தை மேற்கொள்வார். திராவிட மாடலுக்கு, திராவிட இயக்கத்திற்கு ஐந்தாம் தலைமுறையாக அவர் பொறுப்பேற்றுள்ளார்.
இனி நம் நூறாண்டு கால திராவிடத்தின் பாரம்பரியத்தை கட்டி காத்த நம் தலைவர்கள் போன்று, இன்னும் நூறாண்டு காலம் இந்த கழகத்தில் தளபதிக்கு தளபதியாக இருந்து அவர் பணி ஆற்றுவார் என்று நம்பிக்கையோடு வாழ்த்தி பாராட்டுகிறோம். அவர் பயணம் சிறக்க தமிழர் சார்பாகவும், சிறுபான்மையினர் சார்பாகவும், மறுவாழ்வு இலங்கை மக்கள் சார்பிலும் பாராட்டி வாழ்த்துகிறோம்” என்றார்.