புதுடெல்லி: கடந்த 5 நிதியாண்டுகளில் வங்கிகளில் ரூ.10.09 லட்சம் கோடி வராக்கடன் தள்ளிவைக்கப் பட்டுள்ளதாக மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பெரு நிறுவனங்கள், தொழிலதிபர்களுக்கு வங்கிகள் தாராளமாக கடன் வழங்குகின்றன. ஆனால் இவற்றில் பல ஆயிரம் கோடி கடன் வசூலிக்க முடியாமல் வராக்கடனாகி விடுகிறது. இந்த வகையில் மெகுல் சோக்ஷி, ஜுன்ஜுன்வாலா, விஜய் மல்லையா மற்றும் பாபா ராம்தேவின் ருச்சி சோயா உள்ளிட்ட 50 வாராக்கடன்தாரர்களின், ரூ.68,607 கோடி வராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக, 2 ஆண்டுக்கு முன்பு தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இது தள்ளுபடி அல்ல ‘தள்ளிவைப்பு’ எனவும், கடனை வசூல் செய்யும் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டாலும், இவற்றை வசூலிக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்திருந்தார். இது பெரும் விவாதத்துக்கு ஆளானது. வங்கிகள் கடனை வசூலிக்க முடியாவிட்டால், அவற்றை கணக்கில் இருந்து நீக்கி வைக்கும் நடவடிக்கைதான் இது. இருப்பினும் இதுபோன்று தள்ளிவைக்கப்பட்ட கடன் தொகை பெரும்பாலும் வசூலிக்கப்பட்டதே இல்லை. எனவே, டெக்னிக்கலாக தள்ளிவைப்பு என கூறப்பட்டாலும், இது தள்ளுபடிதான் என வங்கியாளர்கள் சிலர் விவாதங்களை முன்வைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்திருப்பதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
வராக்கடன் தள்ளுபடி தொடர்பாக கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது: வங்கிகளில் வசூலிக்கப்படாத கடன்கள் 4 ஆண்டுகளை பூர்த்தி செய்ததும் அவை ‘தள்ளிவைக்கப்படுவது’ வழக்கம். அதாவது, அத்தகைய வராக்கடன்கள், சம்பந்தப்பட்ட வங்கியின் வரவு செலவு குறிப்பில் இருந்து நீக்கப்படும். இது, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் மற்றும் கொள்கையின்படி, வங்கிகள் தங்கள் வரவு செலவு குறிப்பை சமன் செய்யவும், வரிச் சலுகையை பெறவும், மூலதனத்தை மேம்படுத்தவும் செய்யக்கூடிய வழக்கமான நடைமுறையே. இதன்படி கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10 லட்சத்து 9,511 கோடி வராக்கடன் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வராக்கடன்கள் தள்ளிவைக்கப்பட்டாலும், கடனாளிகளிடம் இருந்து கடன்களை திரும்பப் பெறவும், அதற்கான நடைமுறைகளும் தொடர்ந்து நடைபெறும்.
கடந்த 5 நிதியாண்டுகளில் தள்ளி வைக்கப்பட்ட கடன் கணக்குகளில் இருந்து ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 36 கோடி மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மேலும், வராக்கடன்களுக்கு காரணமான, பொறுப்பின்றி செயல்பட்ட 3,312 வங்கி அதிகாரிகள் மீது உரிய தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். வராக்கடன் தள்ளிவைக்கப்பட்டாலும் அவை வசூலிக்கப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து கூறினாலும், இதுபோன்ற தள்ளி செய்யப்பட்ட கடன்களை மீட்பது சாதாரணமான காரியமாக இருப்பதில்லை என்கின்றனர். வங்கியாளர்கள். தள்ளி வைக்கப்பட்ட பெரும்பாலான கடன்கள் திருப்பி வசூலிக்கப்படாமலேயே தள்ளி வைக்கப்படுவதே நிதர்சனம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
5 ஆண்டுகளில்
தள்ளிவைக்கப்பட்ட
வராக்கடன்கள்
2017-18 ரூ.1,61,325
2018-19 ரூ.2,36,265
2019-20 ரூ.2,34,171
2020-21 ரூ.2,02,782
2021-22 ரூ.1,74,968
மொத்தம் ரூ.10,09,511