
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இரு சக்கர வாகனத்தை வேகமாக இயக்குவதையும், போதையில் வாகனத்தை ஓட்டுவதையும் இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என்று, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவையில், பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இரு சக்கர வாகன பிரச்சார பயணத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோவையில் இருந்து காத்மண்டு வரை இரு சக்கர வாகன விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கின்றனர். கோவை மாநகரை பொறுத்தவரை சைபர் குற்றங்களை, குற்றங்கள் நடக்கும் முன் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தபடுகின்றது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது காவல் துறையினர் பாதுகாப்பில் இருப்பார்கள். இரு சக்கர வாகனத்தை வேகமாக இயக்குவதையும், போதையில் வாகனத்தை ஓட்டுவதையும் இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். முக்கிய சாலைகளில் 500 மீட்டருக்கு ஒரு இடத்தில் பேரிகார்டு அமைத்து கண்காணிக்கப்படும்.

கோவையில் இரவு நேரங்களில் அதிவேகமாக இரு சக்கர வாகனங்கள் இயக்குவதை தடுக்க 3 சிறப்பு படைகள் அமைத்து கண்காணித்து வருகின்றோம். 30க்கும் மேற்பட்ட வாகனங்களை பிடித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அவினாசி சாலை, திருச்சி சாலை பகுதிகளில் மக்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது செயல்படக் கூடாது” எனத் தெரிவித்தார்.