டெல்லி ஆசிட் வீச்சு சம்பவம் – 3 பேர் கைது

புதுடெல்லி,

டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 17 வயது பள்ளி மாணவி தனது சகோதரியுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் மாணவி மீது ஆசிட் வீசி விட்டு தப்பிச் சென்றனர். இதில் அவரது முகம், கண்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து அந்த மாணவி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தையடுத்து டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஆசிட் வீச்சு சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரியிடம் விசாரித்ததில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது சகோதரிக்கு நன்கு அறிமுகமான இருவர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஆசிட் வீசியவர்கள் அடையாளத்தை காயமடைந்த சிறுமி போலீசாரிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஆசிட் வீசிய சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆசிட்டை ஆன்லைனில் வழியாக ஆர்டர் செய்து வாங்கியது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்துவதற்கான காரணம் குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.