மத்திய மாநில அரசுகளை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் போராடியதை போன்று அடுத்த வருடம் உழவர் தினத்தன்று தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் மாநாட்டில் கோவை விவசாயிகள் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தென்னை உழவர்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டை இந்திய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகயர், தமிழக விவசாய பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் ஈசன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் இந்த மாநாட்டை துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் ஈசன், ‘இந்த மாநாட்டில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் தேங்காய் கொள்முதல் விலையை 150 லிருந்து 150 ரூபாயாக உயர்த்த வேண்டும். கொள்முதல் 250 கிலோவில் இருந்து 500 கிலோவாக உயர்த்த வேண்டும். கள் இறக்கி விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்.
தென்னைக்கு பரவும் வாடல் நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், அடுத்த வருடம் வருகின்ற உழவர் தினத்தன்று டெல்லியில் நடைபெற்றது போல தென்னை விவசாயிகள் ஜூலை 5ஆம் நாள் தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்’ என்று கூறினார்.