தமிழகத்தில் சாலையே தெரியாத அளவுக்கு பனிமூட்டம்: விலகாத பனியால் பொதுமக்கள் சிரமம் ..!!

கள்ளக்குறிச்சி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழைக்கு இடையே பனிமூட்டம் நிலவியதால் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை மற்றும் அதன் சுற்றுபுற கிராமங்களில் அதிகாலை பனிப்பொழிவு நிலவியது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சாலைகளில் மெதுவாக சென்றனர்.

கனரக லாரி ஓட்டுனர்கள் சாலை ஓரம் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு வானம் தெளிவானதும் புறப்பட்டு சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் மழை ஒய்ந்த நிலையில் தற்போது கடும் பனி மூட்டம் நிலவுகிறது. கடும் குளிரை எதிர் கொள்ள முடியாமல் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே  முடங்கினர். கண்ணுக்கு தெரியாத வகையில் பனி மூடி இருந்த சாலையில் வாகன ஓட்டிகள் விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.

இதே போல் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிகாலை பனிப்பொழிவு நிலவியது. ஊட்டி, கொடைக்கானல் போல் குளிர்ந்த வானிலை நிலவியும்,  பனிப்பொழிவு காரணமாக தெருக்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரம் பெய்த மழையால் ஏரி, குளம் நிரம்பி குளிர்ச்சியான சூழல் நிலவியது. குறிப்பாக ஆலம் பூண்டி, நாட்டார் மங்களம், வல்லம், வளத்தை உள்ளிட்ட இடங்களில் பனிபொழிவு நிலவியதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சாரல் மழை போல பனி பொழிவு காணப்பட்டது. காலை 8 மணி ஆகியும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் விளக்குகளை ஏரியவிட்டபடி ஊர்ந்துசென்றனர்.

பனி பொழிவு தொடர்ந்து நீடித்தால். சம்பா, தாளடி பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்படும் என்றும் நோய் தாக்கும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேளூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக குளிர்ந்த சீதோஷண நிலை நிலவியது. காலை 8 மணி ஆகியும் புகை போல் பனிமூடி இருந்ததால் வாகனங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்வோரும் கடும் அவதிக்குள்ளாகினர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மேல்மருவத்தூர் பகுதிகளில் அதிகாலை பொழிந்த பனி பொழிவால் எதிர்வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத நிலை காணப்பட்டது. மலை பிரதேசம் போன்ற சீதோஷண சூழல் நிலவியதால் வாகன ஓட்டிகள், நடை பயிற்சி செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.