புதுடில்லி :ஆபாச படம் எடுத்து வினியோகித்த வழக்கில், தொழில்அதிபர் ராஜ் குந்த்ரா, ‘பாலிவுட்’ நடிகையர் ஷெர்லின் சோப்ரா, பூணம் பாண்டே ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமின் அளித்தது.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும், ‘பாலிவுட்’ நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா, 47, மீது, ஆபாச படம் எடுத்து அதை பதிவிட்டு வந்ததாக புகார் எழுந்தது.
இந்த வழக்கில் ராஜ் குந்த்ரா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
‘பாலிவுட்’ நடிகையர் ஷெர்லின் சோப்ரா, பூணம் பாண்டே ஆகியோரும் குற்றவாளிகளாக இணைக்கப்பட்டனர். இந்த வழக்கில் குந்த்ராவை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி குந்த்ரா மற்றும் நடிகைகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.வசந்த் வாதிடுகையில், ”இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. விசாரணைக்கு மனுதாரர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். எனவே, அவர்களுக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும்,” என கோரினார்.
இதை ஏற்று, ராஜ் குந்த்ரா, ஷெர்லின் சோப்ரா மற்றும் பூணம் பாண்டே ஆகியோருக்கு நீதிமன்றம் முன்ஜாமின் அளித்து உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement