மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் இலவச பயிற்சி; தித்திப்பான லாபம் தரும் தேன் வளர்ப்பு: ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம்

மதுரை: சுத்தமான தேன் ஆரோக்கியத்துடன், மருந்துப் பொருளாகவும் பயன்படுவதால் தரத்தின் அடிப்படையில் அதிக விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயங்குவதில்லை. இவ்வகையில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் தொழிலாக தேன் உற்பத்தி தொழில் மாறி வருகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தேன் உற்பத்தி செய்து ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தொழிலாகவும் பலர் இதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக மதுரையில் வேளாண் கல்லூரி மற்றும் அறிவியல் நிலையத்தில் இலவச சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

பழங்கால மனிதர்கள் முதன் முதலாக சாப்பிட்ட இனிப்பான உணவு தேன். இந்தியாவில் 500க்கும் அதிகமான பூக்கும் தாவரங்கள் தேனீக்களுக்கு உணவு தரும் பயிர்களாக இருக்கின்றன. கடுகு தேன், யூகலிப்டஸ் தேன், விச்சி தேன், சூரியகாந்தி தேன், புங்கம் தேன், பல பூச்சிகளிலிருந்து கிடைக்கும் தேன், இமாலய தேன், அகேசியா தேன், காட்டுத்தேன், ஒரு பூவிலிருந்து கிடைக்கும் தேன், பல பூக்களிலிருந்து கிடைக்கும் தேன் என பலவகை தேன் காணப்படுகின்றன.

குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள், விளையாட்டு வீரர்கள், நோயுற்றவர்கள் போன்ற அனைவருக்கும் ஏற்ற உணவாக தேன் இருக்கிறது. எலுமிச்சைச்சாறும், தேனும் கலந்த ஜூஸ் கோடை காலத்தில் குடிக்க ஏற்றது. கரும்புச் சர்க்கரைக்கு பதிலாகத் தேனை பால், தேனீர், காப்பியுடன் சேர்த்தும் அருந்தலாம். தேன் குறிப்பாக கல்லீரலின் செயல்பாட்டைத் தூண்டுகின்றது. இரைப்பைப் புண், குடல் புண், நாக்குப் புண் ஆகியவற்றைத் தேன் குணப்படுத்துகிறது. தேன் ஆயுர்வேத மருத்துவத்தில் பல வகை லேகியங்கள் தயாரிக்கப் பயன்படுகின்றது. இதயத்தை, பற்கள், எலும்புகளை வலுப்படுகின்றன. தொண்டையினுள் சதை வளர்வதை தடுக்கிறது.

தேனீக்கள் சுறுசுறுப்பிலும், தாம் வாழும் சமுதாய வாழ்க்கை முறையிலும் மனிதனுக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவை. தேனீ வளர்ப்பு விவசாயம் சார்ந்த நல்ல வருமானத்தை தரக்கூடிய ஒரு சுயதொழில். தேனி வளர்ப்பு மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல நன்மைகள் கிடைக்கின்றன. அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவி புரிவது, அதன் மூலம் மகசூலை அதிகரிப்பதால் உழவுத் தொழிலுக்கு உறுதுணை செய்யும் தேனீக்கள் ‘வேளாண் தேவதைகள்’ என்று போற்றப்படுகின்றன. மலைத் தேனீ, கொம்புத் தேனீ, இந்தியத் தேனீ, இத்தாலிய தேனீ, கொசுத் தேனீ என இந்தியாவில் 5 வகையான தேனீ சிற்றினங்கள் காணப்படுகின்றன.

மதுரை வேளாண் வல்லுநர்கள் சுப்பிரமணியன், சுரேஷ் ஆகியோர் கூறியதாவது: தேனீ வளர்ப்பு முறையில் தேனிகளை தாக்கக்கூடிய பூச்சிகளில் மிக முக்கியமான எதிரி மெழுகு அந்துப் பூச்சியாகும். சேமித்து வைக்கப்பட்டுள்ள அடைகளை இப்பூச்சி தாக்கும். இதை தடுக்க பெட்டிகளை வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். அடிப்பலகை, மற்றும் பெட்டியின் பிற பகுதிகளில் காணப்படும் முட்டைக் குவியல், இளம் புழுக்கள் ஆகியவற்றைத் தேடி அழிக்க வேண்டும். பேசிலஸ் துரின்ஜியன்சிஸ் என்ற உயிர்க்கொல்லி பாக்டீரியாவை சேமித்து வைக்கப்பட்ட அடைகளின் மீது தெளிக்கலாம். எறும்புப் புற்றுகளைத் தேடிக் கண்டுபிடித்து அதனுள் பூச்சி மருந்துக் கரைசலை ஊற்றி அழிக்க வேண்டும்.

தேன் பெட்டி தாங்கியின் கால்களின் மேல் கிரீஸ் தடவி வைக்கலாம். மஞ்சள் பட்டைக் குளவிகளாலும் பாதிப்பு உண்டு. இவற்றை தேடிக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும். உருவில் சிறிய ‘வரோவா’ செவ்வுண்ணியானது, உடல் உருண்டையாக, குண்டூசியின் தலை அளவு இருக்கும். இவை தேனீக்களின் வயிற்றுப் பகுதியின் மேல் இருந்து ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன. ‘ட்ரோபிலேலாப்ஸ்’ செவ்வுண்ணி இவை ‘வரோவா’ செவ்வுண்ணிகளை விட உருவில் சிறியவை.

உடற்பகுதி நீண்டு ரோமங்களுடன் இருக்கும். இவை இடம் பெயர்ந்து செல்லும் திறன் குறைவாக உள்ள இத்தாலியத் தேனீ இனங்களை தாக்குகின்றன. பெட்டியின் சட்டங்களின் மேல் ஒரு சட்டத்திற்கு 200 மில்லி கிராம். நன்கு பொடி செய்யப்பட்ட கந்தகத் தூளை வாரம் ஒரு முறை 2-3 முறை தூவி கட்டுப்படுத்தலாம். இதேபோல் மேல் மூடியினுள் பதுங்கி இருக்கும் பல்லிகளையும் கட்டுப்படுத்த வேண்டும், கருங்குருவிகளும் பறந்து செல்லும் தேனீக்களைப் பிடித்து உண்கின்றன.

ஒளிரும் தேனீ வைரஸ் வளர்ந்த தேனீக்களை தாக்குகின்றது. இந்நோய் தாக்கத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தோன்றும் முன்னரே தேனீக் கூட்டங்களுக்கு 5 முதல் 10 கிராம் விரல் மஞ்சள் தூள், 100 கிராம் சர்க்கரை, 100 கிராம் தண்ணீர் கலந்து கொடுப்பதால் நோய் வராமல் தடுக்கலாம். விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் தேனீ வளர்ப்புக்கான இலவச பயிற்சியில் கலந்து பயன்பெறலாம்.இவ்வாறு தெரிவித்தனர்.

கிலோ ரூ.500 வரை விற்பனை
விவசாயி சிவக்குமார் கூறும்போது, ‘‘3 ஆண்டுகளுக்கு முன் மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்று தேனீ வளர்ப்பு குறித்து கற்று, தொழிலை துவங்கினேன். ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் 25 தேன் பெட்டிகள் வைத்தேன். உள்ளூரில் வறட்சியான நேரத்தில் கேரளா, கர்நாடக உள்ளிட்ட சுற்றுப்புற மாநிலங்களுக்கு எடுத்து சென்று தேன் உற்பத்தி ஆரம்பித்தேன். வாரத்திற்கு ஒரு பெட்டியிலிருந்து 1.5 கிலோ தேன் எடுக்கலாம். கிலோ ரூ.500 வரை விற்பனை செய்யப்படுவதால், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.