திட்டங்கள் அனைத்திற்கும் மத்திய அரசிடம் அனுமதி வாங்கி செயல்படுத்த வேண்டும் என்ற நிலை உள்ளது. அந்த நிலை மாறவேண்டும் என்று, முதல்வர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரியில், மத்திய சுற்றுலா அமைச்சக நிதியின் கீழ் சுதேசி தர்ஷன் திட்டத்தில், மேம்படுத்தப்பட்ட திட்டங்களை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று அண்ணா சாலை தனியார் விடுதியில் நடந்தது.
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, “சுற்றுலாவை மேம்படுத்த புதுச்சேரிக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி அளித்திருக்கிறது. மேலும் நிதி வழங்கவும் ஒப்புக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
புதுச்சேரியை சிங்கப்பூர் போன்று கொண்டு வரவேண்டும் என்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கூறி வருகிறேன். ஆனால், மாற்ற முடியவில்லை. தார்ச் சாலைகள் அமைக்க பூஜை போடப்பட்டுள்ளது. ஆனால், மழையின் காரணமாக சாலைகளை போடமுடியவில்லை.
திட்டங்களை நிறைவேற்றுவதில் நிர்வாக சிக்கல்களால் காலதாமதம் ஏற்படுகிறது. அனைத்திற்கும் மத்திய அரசிடம் அனுமதி வாங்கி செயல்படுத்த வேண்டும் என்ற நிலை உள்ளது. அந்த நிலை மாறவேண்டும். எதனை விரைவாக செயல்படுத்த வேண்டுமோ அதனை நாம் கையில் எடுத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசின் அனுமதிபெற்று தான் செயல்படுத்த வேண்டும் என்ற நிலை வரும்போது, செயல்பாடு விரைவாக இல்லாத நிலை ஏற்படுகிறது. நிர்வாகத்தில் சின்னச்சின்ன தடங்கல் ஏற்படுவதால் காலதாமதம் ஏற்படுகிறது” என்று அவர் கூறினார்.