கள்ளக்குறிச்சி : கணியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கில், தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
பள்ளி மாணவியின் உடலில் இருந்த காயங்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து தமிழக காவல்துறை, தனியார் பள்ளி தாளாளர், செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மர்ம மரண விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தாயார் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மாணவிக்கு உடலில் ஏற்பட்ட காயங்கள் குறித்து நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அப்போது மாணவியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவியின் உடல்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்ட பல விவரங்களை எடுத்து கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “மாடியில் இருந்து குதித்ததால் கூட காயங்கள் ஏற்பட்டிருக்கும் தானே” என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழக அரசு, போலீஸ் மற்றும் தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.