புதுடெல்லி: மேகாலயாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்களை பாஜ தன்வசப்படுத்தியுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த போதிலும் தேசிய மக்கள் கட்சி மற்றும் பாஜ இடையேயான உறவு சுமூகமாக இல்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு தேர்தலில் தேசிய மக்கள் கட்சியை ஒரங்கட்டும் நோக்கத்துடனேயே கூட்டணியில் உள்ள இரண்டு எம்எல்ஏக்களை பாஜ கட்சியில் இணைத்துள்ளதாக கூறப்படுகின்றது. தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் பெர்லின் சங்மா, பெனிடிக் மாராக் ஆகியோர் பாஜவில் நேற்று தங்களை இணைத்துக்கொண்டனர். இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஷாங்பிலியாங் மற்றும் சுயேட்சை எம்எல்ஏ சாமுவேல் சங்மா ஆகியோரும் பாஜவில் தங்களை இணைத்துக்கொண்டனர். 2018ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே பாஜ வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
